/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆட்சி குழு கூட்டம் நடத்த வலியுறுத்தல்
/
ஆட்சி குழு கூட்டம் நடத்த வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2024 05:53 AM
ஓமலுார்: ஆட்சி குழு கூட்டம் நடத்த, பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், நேற்று முன்தினம் தமிழக உயர்கல்வித்துறை அரசு செயலருக்கு அனுப்பிய கடிதம்: பெரியார் பல்கலையில், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்சிக்குழு கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், 6 மாதங்களாக நடத்தாததால், பல்கலை நிர்வாகம் முடங்கியுள்ளது. உடனே நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராசிரியர் நிலையில் இருந்து மூத்த பேராசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை, உடனே ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும். ஆட்சி குழு தீர்மானங்களை பல்கலை இணையதளத்தில் வெளியிட்டு, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
பல்கலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்ட கூடுதல் முதன்மை தேர்வு கண்காணிப்பாளர், தேர்வு தாள் மதிப்பீடு பணியை மீண்டும் வழங்க வேண்டும். முழு கூடுதல் பொறுப்பு வகிக்கும் துறைத்தலைவர்களான புல முதன்மையர், தேர்வாணையரை, அப்பொறுப்புகளில் இருந்து விடுவித்து, மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தும்படி, துறை நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
'ஸ்கோபஸ் வெப் ஆப் சயின்ஸ்' எனும் பன்னாட்டு ஆய்வு நுால்களில் கட்டுரைகளை சமர்ப்பித்தால் மட்டும் ஆராய்ச்சியை முடிக்க முடியும் என்ற விதி உள்ளதால், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பலர், ஆய்வை முடிக்க முடியாமல் படிப்பை நிறுத்தி வருவதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.