/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குறைந்த ஊதியத்தால் துாய்மை பணியாளர் கிடைப்பதில்லை 'வாட்டர் பெல்' திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்
/
குறைந்த ஊதியத்தால் துாய்மை பணியாளர் கிடைப்பதில்லை 'வாட்டர் பெல்' திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்
குறைந்த ஊதியத்தால் துாய்மை பணியாளர் கிடைப்பதில்லை 'வாட்டர் பெல்' திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்
குறைந்த ஊதியத்தால் துாய்மை பணியாளர் கிடைப்பதில்லை 'வாட்டர் பெல்' திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்
ADDED : ஜூலை 06, 2025 01:58 AM
மிக
குறைந்த ஊதியம் என்பதால், துாய்மை பணிக்கு ஆட்கள் கிடைக்காததால், அதிக
மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்த
முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், 'வாட்டர் பெல்'
திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால், பள்ளிகளில்
நிரந்தர துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, தலைமை
ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து
பள்ளிகளில், மாணவர்களுக்கு போதிய அளவில் கழிப்பறைகள் அமைக்கப்பட
வேண்டும் என, மத்திய அரசு திட்டத்தில் நிதி ஒதுக்கி, தனியார்
பங்களிப்புடன், கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி தமிழக
பள்ளிகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்ட பின்பும், அவற்றை
துாய்மைப்படுத்த பணியாளர்கள் இல்லை. இதனால் பல பள்ளிகளில்
கழிப்பறைகள் பூட்டப்பட்டு, பயன்பாடற்ற நிலையில் இருந்தன.
பின்,
2017ல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கப்படும் கல்வி நிதி
மூலம், பகுதி நேர துாய்மை பணியாளர்களை நியமித்துக்கொள்ள
உத்தரவிடப்பட்டது. அதன்படி ஒரு பள்ளிக்கு, ஒரு துாய்மை பணியாளர்
நியமிக்கப்பட்டு, மாத ஊதியம், 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆனால், 7 ஆண்டாகியும், இந்த ஊதியம் உயர்த்தப்படவில்லை.
மேலும்,
4 அல்லது 5 மாதங்களுக்கு ஒருமுறையே ஊதியம் வழங்கப்படுவதால்,
துாய்மை பணிக்கு யாரும் வருவதில்லை. அதுமட்டுமின்றி, 250
மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில், கழிப்பறை பராமரிப்பு என்பது
மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில்,
6,254 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 3,047
பள்ளிகளில், 250 முதல், 1,000 மாணவர்கள் வரை உள்ளனர். 472
பள்ளிகளில், 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ளனர். இந்த
பள்ளிகளுக்கும், ஒரே ஒரு துாய்மை பணியாளரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுவும் பகுதி நேரம் என்பதால், காலையில் சுத்தம் செய்துவிட்டு,
பணியாளர் சென்று விடுகிறார். பின் சில மணி நேரத்தில், கழிப்பறைக்குள்
செல்ல முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல மாணவ, மாணவியர்,
அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்து, கழிப்பறைக்கு செல்வதை
தவிர்க்கின்றனர். இது, பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு
வழிவகுக்கிறது.
இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு
பள்ளிகளில், 100க்கும் குறைவாக மாணவ, மாணவியர் உள்ள பள்ளிகளில்,
இப்போதுள்ள பகுதி நேர துாய்மை பணியாளர் முறை போதுமானதாக இருக்கும்.
250க்கும் மேல் மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், முழு நேர துாய்மை
பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
குறிப்பாக மாணவியர் அதிகம் உள்ள
பள்ளிகளில் குறைந்தபட்சம், 5 முறை சுத்தம் செய்தால்தான்,
கழிப்பறைகளை பயன்படுத்த முடியும். இதற்கு பகுதி நேர துாய்மை
பணியாளர்கள் வருவதில்லை. ஏனெனில் மாத ஊதியமே, 3,000 ரூபாய். அந்த
ஊதியமும் ஆண்டுக்கு இருமுறையே தருகின்றனர். இதனால் ஊரக வேலை வாய்ப்பு
திட்ட வேலைக்கு செல்கிறோம் எனக்கூறி வர மறுக்கின்றனர். மேலும் அதிக
எண்ணிக்கையில் உள்ள பள்ளிக்கு, துாய்மை பணியாளர்கள் கிடைப்பதில்லை.
சுவர்
இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதால், மாணவ, மாணவியர்
ஆரோக்கியத்துக்கு கவனம் செலுத்தினால்தான் கற்றல் மேம்படும். அதனால்,
250க்கும் மேல் மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், முழு நேர துாய்மை
பணியாளரை உடனே நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான், 'வாட்டர் பெல்' திட்டத்தையும் முறையாக செயல்படுத்த
முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நமது நிருபர்

