ADDED : நவ 20, 2025 01:57 AM
சேலம், தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில், சேலம் மாவட்ட நில அளவையர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நேற்று, நில அளவையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். மாநில தலைவர் அர்த்தனாரி பேசினார்.
அதில் பணிக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணிச்சுமையை திணிப்பதை கைவிடுதல்; ஆய்வு பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிடுதல்; தரம் இறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியை தகுதியான நில அளவையர்களுக்கு வழங்குதல்; ஊதிய முரண்பாடுகளை களைதல் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாவட்ட இணை செயலர் தமிழரசன், செயலர் செல்லமுத்து உள்பட ஏராளமான நில அளவையர்கள் பங்கேற்றனர்.

