/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குறைவான குடிநீர் வினியோகம்; பெண்கள் குடங்களுடன் மறியல்
/
குறைவான குடிநீர் வினியோகம்; பெண்கள் குடங்களுடன் மறியல்
குறைவான குடிநீர் வினியோகம்; பெண்கள் குடங்களுடன் மறியல்
குறைவான குடிநீர் வினியோகம்; பெண்கள் குடங்களுடன் மறியல்
ADDED : மார் 11, 2025 07:12 AM
மேட்டூர்: மேட்டூர் நகராட்சி நிர்வாகம் குறைவான குடிநீர் வினியோகம் செய்வதாக கூறி, இரண்டாவது வார்டு மீனவர் காலனி பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர் நகராட்சி, இரண்டாவது வார்டு குள்ளவீரன்பட்டி, மீனவர் காலனியில், 120 வீடுகள் உள்ளன. அப்பகுதியில், 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அதிலிருந்து குள்ளவீரன் பட்டியில் உள்ள இதர பகுதிகள், பொன்னகர் பகுதிக்கு சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் குறைவாக வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அதனை தொடர்ந்து நகராட்சி உதவி பொறியாளர் மலர் மற்றும் ஊழியர்கள், இரு நாட்களுக்கு முன்பு மீனவர் காலனியில் ஆய்வு செய்தனர். அப்பகுதி வீடுகளில், ஒரு இணைப்பில் பல குழாய்கள் பொருத்தி குடிநீர் எடுப்பது, சட்டவிரோதமாக குழாய்கள் இணைத்து குடிநீர் எடுப்பது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று மீனவர் காலனிக்கு குறைவான நேரம் குடிநீர் வினியோகம் செய்ததாக தெரிகிறது.
பாதித்த பெண்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு அருகிலுள்ள மேட்டூர்-கொளத்துார் நெடுஞ்சாலையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். நகராட்சி உதவி பொறியாளர் மலர், மேட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு குடிநீர் இணைப்புகளை, விரைவில் போலீஸ் பாதுகாப்புடன் வந்து ஆய்வு செய்வதாக கூறினர். போராட்டத்தை தடுக்க, தேவையான குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் கூறியதையடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.