சேலம்: சேலம், குரங்குச்சாவடி, சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி விழா கடந்த, 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை கனி காணுதலுடன், ஆராட்டு விழா தொடங்கி, ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் பூஜை நடந்தது. மதியம் கொடி இறக்கப்பட்டது. தொடர்ந்து, 25 கலசாபிேஷகத்துடன் உச்சி கால பூஜை நடந்தது.
மாலை, அண்ணாபுரம் ஓம்சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரண பெட்டி புறப்பட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 6:30 மணிக்கு ஏராளமான பக்தர்கள் மகர விளக்கு, கற்பூர ஆழி ஏந்தியபடி, கோவிலை வலம் வந்தனர். அப்போது கோவில் எதிரே உள்ள மலையில் ஐயப்பன் ஜோதி ரூபத்தில் காட்சி அளிக்க, கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள், 'சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் கோஷம் எழுப்பி தரிசித்தனர். அப்போது சுவாமி ஐயப்பனுக்கு, திரு ஆபரணம் அணிவித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பகவதி சேவையுடன் மகர ஜோதி விழா நிறைவு பெற்றது.

