ADDED : மே 23, 2025 01:30 AM
வாழப்பாடி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரமோத் யாதவ், 35. இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையில் தங்கி பணிபுரிகிறார்.
கடந்த, 18ல் சைக்கிளில், அங்குள்ள சேத்துக்குட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, தினேஷ்குமார் ஓட்டிவந்த பைக், பிரமோத் யாதவ் மீது மோதியது. இதில் யாதவ் படுகாயம் அடைந்ததால், தினேஷ்குமாரிடம் கேட்டார். அவர், யாதவை தாக்கியுள்ளார். தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சிலர், தினேஷ்குமாருக்கு ஆதரவாக யாதவை தாக்கினர்.
தொடர்ந்து யாதவ் ஆலைக்கு சென்று, அவருடன் பணிபுரியும் பீகாரை சேர்ந்த மேலும், 2 பேரை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 3 பேரும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உருக்காலை இயக்குனர் சக்கரவர்த்தி புகார்படி, வாழப்பாடி போலீசார், தினேஷ்குமார், 24, உள்பட, 3 பேரை கைது செய்தனர். நேற்று, இந்த வழக்கில் வெள்ளாளகுண்டத்தை சேர்ந்த பெயின்டர் சங்கர், 25, என்பவரை கைது செய்தனர்.