/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஆக 08, 2025 01:43 AM
சேலம், ஆடி திருவிழாவை ஒட்டி, சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. காலை, 8:45 மணிக்கு, தேரை, விழாக்குழுவினர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, மாரிமுத்து தெரு, தங்க செங்கோடன் தெரு, அண்ணாமலை தெரு உள்ளிட்ட வீதிகள் வழியே தேர் வலம் வந்தது. வழிநெடுக நின்றிருந்த பக்தர்கள் வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை கொடுத்து படையலிட்டு வணங்கினர்.
தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் ஆடியபடி பலர் அணிவகுத்து சென்றனர். தேர், மீண்டும் கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அர்ச்சனை நடந்தது. பின் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
13ல் அக்னி திருவிழா
பனமரத்துப்பட்டி அருகே ச.ஆ.பெரமனுார், பச்சையம்மன் கோவில் அக்னி திருவிழாவுக்கு பூச்சாட்டுதல் நேற்று முன்தினம் இரவு நடந்தது. காலையில் பச்சையம்மன், பூமலையப்பர், செம்மலையப்பர், காரடியான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபி ேஷகம், அலங்காரம் செய்தனர். மாலை பூ சாட்டுதல் விழா நடந்தது. வரும் 13ல், அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.