/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்டேஷன் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி போலீசை மிரட்டிய மெக்கானிக் கைது
/
ஸ்டேஷன் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி போலீசை மிரட்டிய மெக்கானிக் கைது
ஸ்டேஷன் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி போலீசை மிரட்டிய மெக்கானிக் கைது
ஸ்டேஷன் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி போலீசை மிரட்டிய மெக்கானிக் கைது
ADDED : டிச 19, 2024 01:33 AM
கெங்கவல்லி, டிச. 19-
நில பிரச்னையில் நடவடிக்கை இல்லை என, போலீஸ் மீது குற்றம்சாட்டி, மெக்கானிக், அவரது மனைவியுடன், ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றார். அவர்களை மீட்ட பின், போலீசை மிரட்டியதாக, மெக்கானிக்கை, போலீசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி, மேலவீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 37. திருப்பூரில் பொக்லைன் வாகன மெக்கானிக்காக பணிபுரிகிறார். இவரது வீடு அருகே, செல்வம், 40, என்பவர் வசிக்கிறார். இரு குடும்பத்தினர் இடையே நிலப்பிரச்னை உள்ளது. செல்வம் சமீபத்தில் வீடு கட்டி பூச்சு வேலை மேற்கொண்டுள்ளார். இதில் கடந்த, 5ல், அவர்கள் இடையே, பிரச்னை எழுந்தது. செல்வராஜ், கெங்கவல்லி போலீசில் புகார் அளித்தார். இருவரையும் அழைத்து பேச்சு நடத்திய போலீசார், அளவீடு செய்து தீர்வு காண அறிவுறுத்தி அனுப்பினர்.
நேற்று செல்வம், வீட்டுக்கு பூச்சு வேலையை தொடர்ந்ததால், செல்வராஜ் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது செல்வம் தகாத வார்த்தையில் திட்டியதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் கூறி, காலை, 11:40 மணிக்கு, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன் சென்ற செல்வராஜ், அவரது மனைவி கிருஷ்ணவேணியுடன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார், இருவர் மீதும் தண்ணீர் ஊற்றி மீட்டனர். பின், போலீசாரை மிரட்டியது, தற்கொலை முயற்சி, அரசு பணியை தடுத்தல் உள்பட, 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், செல்வராஜை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இடப்பிரச்னை குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் செல்வராஜ் வந்து, 'பிரச்னையை தீர்த்து கொடுக்கவில்லை எனில், உங்களை(போலீசாரை) சும்மா விடமாட்டேன். இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன்' என மிரட்டல் விடுத்தார். அரசு பணியை தடுத்ததோடு, எளிதில் தீப்பிடிக்கும் மண்ணெண்ணெயை அரசு அலுவலகத்துக்கு கொண்டு வந்ததால் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

