/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளி வியாபாரி கொலையில் கூலிப்படைக்கு தொடர்பு
/
வெள்ளி வியாபாரி கொலையில் கூலிப்படைக்கு தொடர்பு
ADDED : பிப் 07, 2024 12:09 PM
சேலம்: கூலிப்படை வைத்து வெள்ளி வியாபாரியை தீர்த்துக்கட்டியது கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது. அத்துடன் கொலையானவரின் மச்சானை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளி வியாபாரி சங்கர், 47. கடந்த, 2ல் அதே பகுதியில் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். செவ்வாய்ப்பேட்டை போலீசார், விபத்து வழக்காக பதிவு செய்னர். ஆனால், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்ததில், திட்டமிட்டு காரை ஏற்றி, சங்கர் கொல்லப்பட்ட காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து நடத்திய விசாரணைக்கு பின் சங்கரின் தங்கையான விஜயலட்சுமி, 37, என்பவரின் கணவர் சுபாஷ்பாபு, 47, சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர், போலீசில் அளித்த வாக்குமூலம்: விஜயலட்சுமியுடன், 1999ல் திருமணமானது. வெள்ளி வியாபாரம் செய்கிறேன். 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கோகுல், 23, பி.இ., மெக்கானிக்கல் முடித்துவிட்டு, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இளைய மகன் யோகித், 12, ஏழாம் வகுப்பு படிக்கிறார். 2016ல் கருத்து வேறுபாடு ஏற்பட, பிரிந்து சென்று விஜயலட்சுமி, இரு மகன்களுடன், செவ்வாய்ப்பேட்டை, ஏ.வி., அய்யர் தெருவில் அவரது தந்தை சாந்தாராமுடன் வசிக்கிறார். நான் சின்னப்புதுாரில் பெற்றோருடன் உள்ளேன்.
நீதிமன்றம் மூலம், 2021ல் மனைவி விவாகரத்து பெற்றார். அதற்கு முன் வரை, இரு மகன்களை அடிக்கடி சந்தித்து பேசி வந்தேன். விவாகரத்துக்கு பின் விஜயலட்சுமி முட்டுக்கட்டை போட்டதால், 2 ஆண்டாக மகன்களை பார்க்க முடியாமல் தவித்தேன். இதற்கு சங்கர் காரணமாக இருந்தார். அந்த ஆத்திரத்தில், 2 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து கூலிப்படையை வைத்து சங்கரை தீர்த்துக்கட்டினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் கூலிப்படை விபரங்களை கூற மறுத்து வருகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
நீதிமன்ற காவலில் எடுத்து, கொலை கும்பலை வளைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்றும் விசாரிக்கின்றனர்.

