/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெல்லில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த வழிமுறை
/
நெல்லில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த வழிமுறை
ADDED : அக் 11, 2024 07:06 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை: மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நெல் பயிரில் தண்டு துளைப்பான் எனும் குருத்துப்பூச்சி தாக்கம் இருக்கும். இலை நுனியில் பழுப்பு நிற முட்டை குவியல் காணப்படும். வெளிர் மஞ்சள் நிற, சிறிய அந்துப்பூச்சிகள் பறக்கும். வளர்ச்சி பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து அதன் நடுப்பகுதியை தின்று விடும். இதனால் பயிர் காய்ந்து கருகி விடும். நன்கு வளர்ச்சியடைந்த கதிர்கள், முதிர்ந்த நிலையில் தானிய பகுதி காய்ந்து வெண்கதிர் போல் காட்சியளிக்கும். இதை தடுக்க நாற்று நடுவதற்கு முன் இலை நுனிப்பகுதியில் உள்ள முட்டை குவியல்களை கத்தரித்து அகற்றி விட வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 25 இடங்களில் பறவைகள் அமர இருக்கை போல தென்னை மட்டைகளை வெட்டி ஊன்றி வைக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு நடவுக்கு பின், 37 நாட்கள் கழித்து ஒரு வார இடைவெளியில், 3 முறை டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் ஒட்டுண்ணி முட்டைகளை விட வேண்டும். ஹெக்டேருக்கு, 1.5 கிலோ பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் வார்குர்ஸ்டாகி உயிரியல் கட்டுப்பாட்டு காரணியாக தெளிக்க வேண்டும். ஹெக்டேருக்கு 10 அல்லது 12 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து அந்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பூச்சி தாக்குதல் அதிகமுள்ள வயல்களில் அசிபேட், அசாடிராக்டின், கார்போசல்பான், கார்டாப் ஹைட்ரோ குளோரைடு, குளோர்பைரிபாஸ், பிப்ரோனில், புளுபென்டிமைட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இந்த வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடித்து பயன்பெற வேண்டும்.

