/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூன்றாவது முறை நிரம்பிய மேட்டூர் அணை டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
/
மூன்றாவது முறை நிரம்பிய மேட்டூர் அணை டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
மூன்றாவது முறை நிரம்பிய மேட்டூர் அணை டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
மூன்றாவது முறை நிரம்பிய மேட்டூர் அணை டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 01, 2025 01:31 AM
மேட்டூர், ஜன. 1-
மேட்டூர் அணை நேற்று இரவு, 10:00 மணிக்கு நடப்பாண்டில் மூன்றாம் முறை நிரம்பியது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., அணை நீரின் மூலம், 13 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் அணையில் ஜூன், 12ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதற்கு நீர்மட்டம் குறைந்தபட்சம், 90 அடி இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன், 12ல் நீர்மட்டம், 43.52 அடியாக இருந்ததால் பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில், 2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி பாதித்தது.
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து கடந்த ஜூலை, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து குறுவை, சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. மீண்டும், 2வது முறையாக கடந்த ஆக.,12ல் அணை நிரம்பியது. இரு முறை நிரம்பிய நிலையில், பாசனத்துக்கு தொடர்ச்சியாக நீர் திறந்ததால் கடந்த அக்., 13ல் அணை நீர்மட்டம், 89.26 அடியாக சரிந்தது.
தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் புயலால் பரவலாக மழை பெய்தது. அதற்கேற்ப நீர் திறப்பு குறைந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம், 119.87 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று இரவு, 10:00 மணிக்கு, 139 நாட்களுக்கு பின்பு, 3வது முறை அணை முழு கொள்ளளவான, 120 அடி, 93.47 டி.எம்.சி.,யை எட்டியது. வினாடிக்கு, 500 கனஅடியாக இருந்த நீர் திறப்பு நேற்று இரவு, 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று காலை, 8:30 மணிக்கு நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளன் குமார் மேட்டூர் அணையை ஆய்வு செய்தார். மேட்டூர் அணை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
டிசம்பரில் 3வது முறை
நிரம்பிய அணை
மேட்டூர் அணை, 1925ல் துவங்கி, 1934ல் கட்டி முடித்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. கட்டி, 90 ஆண்டுகள் ஆன நிலையில் குளிர்காலமான டிசம்பரில் அணை அரிதாகவே நிரம்பியுள்ளது. கடந்த, 1972 டிச., 12ல், 120 அடி, 1997 டிச., 10ல், 120 அடி என இரு முறை நிரம்பியது. மீண்டும், 27 ஆண்டுக்கு பின்பு நேற்று, 3வது முறையாக கடந்த ஆண்டில் அணை நிரம்பி, புத்தாண்டு பரிசு வழங்கியது காவிரி பாசன விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.