/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் 107.44 அடி நீர் இருப்பு; சம்பாவுக்கு முழுமையாக நீர் திறக்க வாய்ப்பு
/
மேட்டூர் அணையில் 107.44 அடி நீர் இருப்பு; சம்பாவுக்கு முழுமையாக நீர் திறக்க வாய்ப்பு
மேட்டூர் அணையில் 107.44 அடி நீர் இருப்பு; சம்பாவுக்கு முழுமையாக நீர் திறக்க வாய்ப்பு
மேட்டூர் அணையில் 107.44 அடி நீர் இருப்பு; சம்பாவுக்கு முழுமையாக நீர் திறக்க வாய்ப்பு
ADDED : நவ 20, 2024 07:28 AM

மேட்டூர்: மேட்டூர் அணையில் சம்பா சாகுபடியை முழுமையாக முடிக்க தேவையான நீர் இருப்பு உள்ளது, காவிரி கரையோர மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., ஆண்டுதோறும் ஜூன் 12ல் அணையில் இருந்து டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம், 13 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நடப்பாண்டு கடந்த ஜூலை, 3ல் அணை நீர்மட்டம், 39.65 அடியாக இருந்ததால் குறுவைக்கு குறித்த நேரத்தில் நீர் திறக்கவில்லை. அதன் பின் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த ஜூலை, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது.
எனினும், ஜூலை, 27 ல் தாமதமாக மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், 13 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், காலதாமதமாக நீர் திறந்ததால், 4.5 லட்சம் ஏக்கரில் செய்ய வேண்டிய குறுவை சாகுபடி, 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே செய்யப்பட்டது. டெல்டாவில், 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என, விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 107 அடியாகவும், நீர் இருப்பு, 74.82 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 9,542 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்னமும் பாசனத்துக்கு, 69 நாட்கள் நீர் திறக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வயல்களில் நீர்தேங்கி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதனால், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு போதுமான நீர் வருவதால் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் டெல்டா சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும். வரும் நாட்களில் நீர்வரத்து குறைந்து, நீர் திறப்பு அதிகரித்தாலும் ஜன., 28 வரை பாசனத்துக்கு நீர் திறக்க முடியும். அதன் பின் அணையில், 30 டி.எம்.சி., நீரை இருப்பு வைக்க வாய்ப்புள்ளது என அணை பொறியாளர்கள் தெரிவித்தனர்.