ADDED : நவ 22, 2026 01:23 AM
ஆத்துார்: சேலம் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில், ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நடமாடும் இ - சேவா வாகனம் தொடக்க விழா, கிராமப்புற சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. வாகனத்தை, ஆத்துார் கூடுதல் மாவட்ட
நீதிபதி ரவிச்சந்திரன், சார்பு நீதிபதி கணேசன் தொடங்கிவைத்தனர்.
நீதிபதி ரவிச்சந்திரன் பேசுகையில், ''வாகனம் மூலம் தொலைதுார பகுதியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்தல், வழக்கு விசாரணையில் பங்கேற்பது, நடமாடும் மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு காணுதல் சாத்தியமாகிறது,'' என்றார்.தொடர்ந்து, சட்ட விழிப்புணர்வு முகாமில், சில முதியவர்கள் அளித்த மனுக்களை நீதிபதிகள் பெற்றுக்கொண்டனர். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜான்சிராணி, மாஜிஸ்திரேட்டுகள் உதயசுந்தரம், மோகனசுந்தரம், வக்கீல்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் வாழப்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நடமாடும் இ - சேவா வாகனத்தை, வட்ட சட்டப்பணி குழு தலைவர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
