/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'குரங்கு குல்லா ' கும்பல் தம்பதியிடம் கொள்ளை
/
'குரங்கு குல்லா ' கும்பல் தம்பதியிடம் கொள்ளை
ADDED : ஜூலை 29, 2025 05:26 AM
சேலம்; சேலத்தில் தம்பதியை கட்டி வைத்து பணம், நகையை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் அருகே அருர் மெயின் ரோடு பகுதியில், தனி வீட்டில் வசிப்பவர் பூமாலை, 51; விவசாயி. இவரது மனைவி சின்னபாப்பா, 41. இவர்கள் செங்கல் சூளையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., படிக்கிறார். மற்றொருவர் திருச்செங்கோடு, பொறியியல் கல்லுாரியில் படிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, பூமாலை வீட்டின் முன் பகுதியிலும், மனைவி வீட்டிலும் துாங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு, 1:00 மணிக்கு, குரங்கு குல்லா அணிந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், பூமாலை வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களின் பேச்சு சத்தம் கேட்டு எழுந்த பூமாலையை, கும்பல் தாக்கியுள்ளது. பின், பூமாலை வாயில் துணி யை திணித்து, கைகளை கட்டினர்.
சத்தம் கேட்டு, சின்னபாப்பா வெளியே வந்த போது, அவரையும் கட்டி வைத்து, வீட்டுக்குள் நுழைந்து, 35,000 ரூபாய் மற்றும் சின்னபாப்பா அணிந்திருந்த தாலி உட்பட 8 சவரன் நகைகளை கொள்ளையடித்து காரில் தப்பினர். இருவரும் கூச்சலிட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.