/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிதி ஒதுக்காததால் மூக்கனேரி சீரமைப்பு பணி நிறுத்தம்; நிலத்தடி நீரும் பாதிக்க வாய்ப்பால் விவசாயிகள் கலக்கம்
/
நிதி ஒதுக்காததால் மூக்கனேரி சீரமைப்பு பணி நிறுத்தம்; நிலத்தடி நீரும் பாதிக்க வாய்ப்பால் விவசாயிகள் கலக்கம்
நிதி ஒதுக்காததால் மூக்கனேரி சீரமைப்பு பணி நிறுத்தம்; நிலத்தடி நீரும் பாதிக்க வாய்ப்பால் விவசாயிகள் கலக்கம்
நிதி ஒதுக்காததால் மூக்கனேரி சீரமைப்பு பணி நிறுத்தம்; நிலத்தடி நீரும் பாதிக்க வாய்ப்பால் விவசாயிகள் கலக்கம்
ADDED : பிப் 03, 2025 07:17 AM
சேலம்: நிதி ஒதுக்காததால் மூக்கனேரி சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரியில் நீர் இல்லாவிட்டால் கன்னங்குறிச்சி, சின்னதிருப்பதி, மன்னார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என, விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம், மூக்கனேரி, 58 ஏக்கரில், இயற்கை சூழ்ந்த நீர்நிலையாக உள்ளது. ஏற்காடு மலை பகுதியில் இருந்து, மழை காலங்களில் வழிந்தோடும் நீர், கன்னங்குறிச்சி புது ஏரிக்கு வந்து, அதிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொத்துக்காரன் ஓடை வழியே மூக்கனேரிக்கு வருகிறது. அந்த ஏரியை, 'அம்ரூத்' திட்டத்தில், 23 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி, 2023 ஜூனில் தொடங்கப்பட்டது.
கரையை வலுப்படுத்தல், கழிவுநீர் செல்ல தனிப்பாதை, சிறுவர் பூங்கா, நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும், ஓராண்டில் முடிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் பாதி அளவு பணி கூட நடக்கவில்லை. இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக, பணியே நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: மழைக்காலங்களில் மூக்கனேரி நிரம்பினால், அடுத்து வரும் கோடை காலத்தை தண்ணீர் பற்றாக்குறையின்றி சமாளித்து விடுவோம். ஆனால் ஏரி சீரமைப்பு செய்யப்படுவதால், கொத்துக்காரன் ஓடையில் இருந்து வரும் நீர், மூக்கனேரிக்கு திறந்து விடாமல், திருமணிமுத்தாறில் கலக்க செய்கின்றனர். இதனால், கடந்த, 3 மாதங்களாக நல்ல மழை பெய்தும் ஏரி நிரம்பவில்லை. வரும் கோடையில் ஏரி வற்றினால், நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த ஏரியில் நீர் இல்லாவிட்டால், கன்னங்குறிச்சி, சின்னதிருப்பதி, மன்னார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், பணி நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'ஒப்பந்ததாரருக்கு பல கட்டங்களாக நிதி ஒதுக்குவது வழக்கம். இதில், 6 கோடி ரூபாய்க்கும் மேல், ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டியுள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகத்துறையில் பேசி வருகிறோம். நிதி ஒதுக்கீடு செய்தால், பணி தொடங்கி விரைவில் முடிக்கப்படும்' என்றனர்.

