/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மொபட் திருடன் தப்பி ஓட்டம்
/
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மொபட் திருடன் தப்பி ஓட்டம்
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மொபட் திருடன் தப்பி ஓட்டம்
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மொபட் திருடன் தப்பி ஓட்டம்
ADDED : பிப் 17, 2024 07:13 AM
சேலம் : போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மொபட் திருடன் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
பீகாரை சேர்ந்தவர் மஹாராம், 40. இவர், சேலம், பள்ளப்பட்டி ஏரிக்காட்டில் வசிக்கிறார். இவரது, 'டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர்' மொபட், கடந்த, 5 இரவு திருடுபோனது. அவர் புகார் அளித்தும், பள்ளப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து அவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து திருடனை பிடிக்க முயன்றனர். இந்நிலையில், 7 இரவு, சாமிநாதபுரத்தில் ஒரு வீட்டின் முன் பைக் திருட முயன்றவனை பிடித்து, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த தமிழரசன், 30, என தெரிந்தது. அவர், மஹாராம் வீட்டின் முன், மொபட் திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் தகவல்படி, அவருடன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜான்பீட்டர், 24, ரஞ்சித், 23, ஆகியோரை கைது செய்த போலீசார், மொபட்டை மீட்டனர்.
இந்நிலையில் ஸ்டேஷனில் இருந்த தமிழரசன், 12 இரவு, 11:00 மணிக்கு தப்பி ஓடி விட்டார். இதை அறிந்து, மா.கம்யூ., மாநகர செயலர் பிரவீன்குமார், ஸ்டேஷனில் வந்து கேட்டபோது, 'திருடனை விரைவில் கைது செய்து விடுவோம்' என, போலீசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் வரை திருடன் கைது செய்யப்படாத நிலையில், போலீசாரின் கவனக்குறைவு குறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று, வாட்ஸாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவலை கசியவிட்டனர். இதையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்ட போலீசாரை இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி, கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.