/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரும்பாலான அதிகாரி பணியிடங்கள் காலி:நகராட்சியில் அத்தியாவசிய பணிகள் பாதிப்பு
/
பெரும்பாலான அதிகாரி பணியிடங்கள் காலி:நகராட்சியில் அத்தியாவசிய பணிகள் பாதிப்பு
பெரும்பாலான அதிகாரி பணியிடங்கள் காலி:நகராட்சியில் அத்தியாவசிய பணிகள் பாதிப்பு
பெரும்பாலான அதிகாரி பணியிடங்கள் காலி:நகராட்சியில் அத்தியாவசிய பணிகள் பாதிப்பு
ADDED : செப் 15, 2025 12:49 AM
மேட்டூர்:மேட்டூர் நகராட்சியில் பெரும்பாலான அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கூடுதல் பொறுப்பு களை அலுவலகர்கள் மேற்கொள்வதால், அடிப்படை பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றன.
மேட்டூர் நகராட்சி, 16.65 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில், 2011 கணக்கெடுப்பின்படி, 30 வார்டுகளில், 52,813 பேர் இருந்தனர். தற்போது, 55,000 முதல், 60,000 பேர் வசிக்கின்றனர். தி.மு.க.,வை சேர்ந்த சந்திரா, நகராட்சி தலைவியாகவும், காசி விஸ்வநாதன் துணை தலைவராகவும் உள்ளனர். அதன் கமிஷனராக, 2023 செப்., 5ல் நித்யா பொறுப்பேற்றார். அவர், இரு ஆண்டாக பணியாற்றிய நிலையில் கடந்த, 12ல், பதவி உயர்வில் கோவை மாநகராட்சி உதவி கமிஷனராக இடமாற்றப்பட்டார். அவருக்கு பதில், திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் வாசுதேவன், மேட்டூர் நகராட்சி கமிஷனர் பொறுப்பை, கூடுதலாக கவனிக்கிறார். தவிர நகராட்சி பொறியாளராக, ஆத்துார் நகராட்சி பொறியாளர் பால
கிருஷ்ணன், கூடுதல்
பொறுப்பாக கவனிக்கிறார்.
உதவி பொறியாளராக, புதிதாக பணியில் சேர்ந்தவர், பயிற்சிக்கு சென்று விட்டார். காலியாக உள்ள மேலாளர் பணியிடத்தை, உதவியாளர் வெங்கடேஷ், கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். இதனால் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் குடிநீர் வினியோகம், துாய்மை பணிகளை ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்ட பணிகளுக்கு, பல கோடி ரூபாய் வழங்காமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பில் அதிகாரிகள் இல்லாததால், கூடுதல் பொறுப்பில் உள்ளவர்கள், பணத்தை இழுத்தடிப்பதால், ஒப்பந்ததாரர்கள் பரிதவிக்கின்றனர்.
மேலும் குடிநீர் வினியோகம், சுகாதாரம், சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் செய்வதற்கு, மேட்டூர் நகராட்சியில், கூடுதல் பொறுப்பாக அதிகாரிகளை நியமிப்பதற்கு பதில் சம்பந்தபட்ட பணியிடங்களுக்கு உரிய அதிகாரிகள், அலுவலர்களை நியமிக்க வேண்டும்.