/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புத்தாண்டு கொண்டாட்டம்; கேளிக்கை விடுதிகளுக்கு எச்சரிக்கை
/
புத்தாண்டு கொண்டாட்டம்; கேளிக்கை விடுதிகளுக்கு எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டம்; கேளிக்கை விடுதிகளுக்கு எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டம்; கேளிக்கை விடுதிகளுக்கு எச்சரிக்கை
ADDED : டிச 31, 2024 07:38 AM
சேலம்: சேலம் மாநகர் போலீஸ்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வரும், 2025 புத்தாண்டை அமைதியாக, விபத்தின்றி கொண்டாட மாநகர் போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். முக்கிய சந்திப்புகளான சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, குரங்குசாவடி, 4 ரோடு, 5 ரோடு, அண்ணாபூங்கா, அஸ்தம்பட்டி, கலெக்டர் ஆபீஸ், ஏற்காடு ரோடு, தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய சந்திப்புகளில் வாகனங்களை அதிவேகமாகவும், மது போதையில் இயக்குபவர், சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவி ஆணையர்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவர். 600க்கும் அதிகமான போலீசார், அதிகாரிகள், 175 ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 22 போலீஸ் ரோந்து வாகனம், மாநகரில் வலம் வரும்.
உரிமம் பெற்ற நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதி ஆகியன மாலை, 6:00 முதல் இரவு 12:00 மணிக்குள் புத்தாண்டு நிகழ்ச்சியை முடித்து கொள்ள வேண்டும். வளாகத்துக்குள் வரும் வாகனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, மற்ற இடங்களில் மதுவகையை பரிமாறக்கூடாது. தற்காலிகமேடை உறுதி தன்மை குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதிசான்று பெற்றிருக்க வேண்டும். நீச்சல் குளம் அருகில் தற்காலிக மேடை கூடாது. நீச்சல் குளத்தை, இன்று, 31 மாலை, 6:00 மணிமுதல், மறுநாள், காலை, 6:00 மணிவரை மூடி வைக்க வேண்டும். மதுகுடித்து விட்டு வாகனம் ஒட்ட முயற்சிப்பவரை, மாற்று வாகனத்தில் அனுப்பி வைப்பதுடன், போதையில் ரகளை செய்பவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
கேளிக்கை நிகழ்ச்சியை மிகுந்த நாகரிகம், கண்ணியத்துடன், ஆபாசமின்றி நடத்த வேண்டும். வருகை தரும் வெளிநாட்டவரின் விபரத்தை, முன்னதாகவே போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். விதிமீறும் ஒட்டல், கேளிக்கை விடுதி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு, எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடுரோட்டில் கேக் வெட்டுவது, பைக் ரேஸ் நடத்துவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களை ஈவ்டீசிங் செய்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடித்து விட்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். புறநகர் மாவட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்பட, 900க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மாலை, 6:00 முதல் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர். நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. இவ்வாறு கூறினர்.