ADDED : ஜன 15, 2024 10:18 AM
இரட்டிப்பு பணம் தருவதாக
ரூ.1.29 லட்சம் மோசடி
இடைப்பாடி அருகே இருப்பாளியை சேர்ந்தவர் சிவக்குமார், 34. மொபைல் கடை நடத்தும் இவரது வாட்ஸாப்புக்கு கடந்த, 10ல் குறுந்தகவல் வந்தது. அதில், 'ஆன்லைனில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் இரட்டிப்பு பணம் வழங்கப்படும்' என கூறப்பட்டிருந்தது. அதை நம்பிய அவர், மறுநாள், 10,000 ரூபாய் செலுத்த, 20,000 ரூபாய் கிடைத்தது. அதேபோல் மற்றொரு முறை செலுத்த, மீண்டும், 20,000 கிடைத்தது. இதனால் நேற்று முன்தினம், 1.29 லட்சம் ரூபாய் செலுத்தினார். ஆனால் இப்போது பணம் திரும்ப வரவில்லை. அத்துடன் மர்ம நபரின் தொடர்பு எண்கள் அனைத்தின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் சிவக்குமார் புகார்படி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொல்லம் - எழும்பூர் இடையேநாளை சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையால் கூட்ட நெரிசலை தவிர்க்க, கொல்லம் - சென்னை, எழும்பூர் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி கொல்லத்தில், ஜன., 16(நாளை) அதிகாலை, 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு, 9:00 மணிக்கு எழும்பூரை அடையும். மறுமார்க்கத்தில் அன்று இரவு, 11:45க்கு எழும்பூரில் புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை, 5:00 மணிக்கு கொல்லத்தை அடையும். இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காட்டெருமை தாக்கிகாவலாளி படுகாயம்
ஏற்காடு, பட்டிப்பாடி, வேலுாரை சேர்ந்தவர் ராமர், 55. தனியார் தோட்டத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்தார். நேற்று பணியில் இருந்த அவர், மதியம், 3:00 மணிக்கு தோட்டத்தில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காட்டெருமை அவரை முட்டியது. இதில் ராமர் படுகாயம் அடைந்தார். அப்போது யாரும் இல்லாததால் அங்கேயே கிடந்தார். மாலை, 5:00 மணிக்கு அந்த வழியே வந்த ஒருவர், ராமரை பார்த்துவிட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து, ராமரை அழைத்துச்சென்று, இரவு, 7:00 மணிக்கு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சேலம் மாநகராட்சியைகண்டித்து ஆர்ப்பாட்டம்
இளைஞர் பெருமன்றம் சார்பில், சேலம், அன்னதானப்பட்டி, திருச்சி கிளை பிரதான சாலையில், மாநகராட்சியை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாதகாப்பட்டி கிளை தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து அன்னதானப்பட்டி போலீசார் எச்சரித்து அனைவரையும் அனுப்பினர்.
இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், ''15 ஆண்டுகளாகபாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தாத மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். கொண்டலாம்பட்டியில் எந்த அடிப்படை வசதியும் நிறைவேற்றப்படவில்லை. சாலைகள் மோசமாக உள்ளன. குறிப்பாக அன்னதானப்பட்டி, திருச்சி கிளை பிரதான சாலையில் உள்ள, 3 அடி பள்ளத்தை, ஒன்றரை ஆண்டாக மூடப்படவில்லை. அதேநேரம் வரி வசூலிப்பதில் மட்டும் மாநகராட்சி குறியாக உள்ளது,'' என்றார்.
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரியில்
பொங்கல் விழா கொண்டாட்டம்
ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரி மற்றும் முத்தாயம்மாள் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சார்பில், கல்லுாரி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான, உறியடித்தல், ரங்கோலி, கயிறு இழுத்தல், லக்கி கார்னர் மற்றும் கட்டுரை, ஓவியம், கவிதை ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், பேராசிரியர்களுக்கு கல்லுாரி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. மேலும், கல்லுாரி சார்பில் விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர் கந்தசாமி, செயலாளர் குணசேகரன், டிரஸ்டி அம்மணி, இணை செயலாளர் ராகுல், உறுப்பினர்கள் உமாராணி, காவ்யா ஆகியோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர்கள் மாதேஸ்வரன், வேணுகோபால், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக மற்றும் ஆய்வக பணியாளர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அரசு ஊழியருக்கு 'பளார்'
பா.ஜ., நகர செயலர் கைது
சேலம் மாவட்டம் இடைப்பாடி, சின்னமணலி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார், 34; மேட்டூர் நகராட்சி வருவாய் உதவியாளர். சேலம் கேம்ப் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி மையத்தில், கடந்த, 12ல் வரி வசூலில் ஈடுபட்டார். அப்போது சேலம் கேம்ப், முத்தாலம்மன் காட்டை சேர்ந்த, பா.ஜ., நகர செயலர் ராமமூர்த்தி, 49, 'என்னிடம் வரி வாங்காமல் மதிய உணவுக்கு செல்லக்கூடாது' என கூறி கன்னத்தில் அடித்தார்' என, கருமலைக்கூடல் போலீசில் தினேஷ்குமார் புகாரளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், கொலை முயற்சி உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, ராமமூர்த்தியை நேற்று கைது செய்தனர்.
நாளை இறைச்சி கடை
செயல்பட தடை
திருவள்ளுவர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள், கடைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி கடைகளை திறந்தால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
மா பூ, பிஞ்சு உதிர்வை
தடுக்க ஆலோசனை
சேலம் மாவட்டத்தில், 15,000 ஏக்கரில் சேலம் குண்டு, இமாம்பசந்த், கிளி மூக்கு உள்பட, 10க்கும் மேற்பட்ட மா ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த மரங்களில் டிசம்பர் இறுதியில் இருந்து பூக்கள் உற்பத்தி தொடங்கியுள்ளது. ஆனால் பனியால் பூ, பிஞ்சுகள் உதிர்வதால் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:
மா பூக்களில் தத்து பூச்சி தாக்குதல், சாம்பல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்காவிட்டால் பூக்கள் கொட்டும். பூக்களில் பூச்சிகளின் எச்சில் பட்டு தேன் மாதிரி கரும் படலம் உருவாகி பூஞ்சானம் ஏற்படும்.
இதை கட்டுப்படுத்த ஆரம்பத்திலே ஒரு லிட்டர் நீரில் நனையும் கந்தகம், 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீரில் தயோமீத்தாக்சோம், 0.5 கிராம் அல்லது இமிடாகுளோப்ரிட், 0.5 மில்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் தெளிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கையாக தெளித்தால் பூக்கள் உதிர்வு குறையும். மா பிஞ்சு பட்டாணி அளவில் இருக்கும்போது, ஒரு லிட்டர் நீரில் என்.ஏ.ஏ., 0.25 மில்லி கலந்து தெளித்தால் பிஞ்சு உதிர்வை தடுக்கலாம். விபரம் பெற, 96002 84443 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறையில்
பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறையில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக பறை ஒலியுடன் தொடங்கிய விழாவில் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை பறைசாற்றும்படி மாணவ, மாணவியரின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடு, புலி, குதிரை நடனம், சிலம்பாட்டம் உள்ளிட்டவற்றை அரங்கேற்றினர். மேலும் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அதனிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள், நடனம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், டீன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை துறையின் மாணவ சங்க உறுப்பினர்கள், பேராசிரியர்கள் தமிழ்சுடர், கலைவாணி, உமா மகேஸ்வரி, அனிதா, டாக்டர் ஹரிஷ்ராஜ், டாக்டர் ஜெயபாலன், ஸ்ரீனிவாசன், தீபிகா, உடற்பயிற்சி இயக்குனர் குமரன் செய்திருந்தனர்.
மகளிர் கைப்பந்து: பெரியார் பல்கலை முதலிடம்
சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலை சார்பில் தென் மண்டல அளவில் பல்கலைகளுக்கு இடையே மகளிர் கைப்பந்து போட்டி கடந்த, 10ல், அங்குள்ள பத்மவாணி கல்லுாரியில் தொடங்கியது. அதில், 46 அணிகள் மோதின. இதன்முடிவில் பெரியார் பல்கலை அணியும், கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலை அணியும் நேற்று இறுதிப்போட்டியில் மோதின. அதில் பெரியார் பல்கலை வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. 2, 3, 4ம் இடங்களை முறையே, மகாத்மா காந்தி அணி, கேரளாவின் கோழிக்கோடு பல்கலை, தமிழகத்தின் பாரதியார் பல்கலை அணிகள் பிடித்தன. இந்த அணிகளுக்கு, பத்மவாணி கல்லுாரி தாளாளர் சத்தியமூர்த்தி, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். பல்கலை உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம் உள்பட பலர் உடனிருந்தனர்.
மக்களுக்கு பொங்கல் வாழ்த்து
ராம்கோ சிமென்ட் நிறுவனம்
வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை நிறுவனம், வாழப்பாடியில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ-, மாணவியரின் கணினி வழி கற்றல், கற்பித்தல் மேம்பாட்டுக்கு நவீன கம்ப்யூட்டர்களை வழங்கியுள்ளன. ஆண்டுதோறும் நிறுவனர் ராமசாமி ராஜா பிறந்த தினத்தையொட்டி, மக்கள் பயன்பெறும்படி ரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை, பொது மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை வழங்கின. சாலை விபத்துகள், உயிர் பலிகளை தடுக்க, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஆண்டுதோறும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது.
தொடர்ந்து சமூக பணியாற்றும் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சார்பில் வாழப்பாடி மக்கள், வாடிக்கையாளர், முகவர், பணியாளர்களுக்கு, இந்நிறுவன துணை தலைவர் துரைசிங்க ராஜா, கணக்குத்துறை உதவி பொது மேலாளர் சுரேஷ்குமார், பணியாளர் துறை மேலாளர் மணிவேல், அலுவலர்கள் முனியசாமி, ஏழுமலை ஆகியோர் பொங்கல் வாழ்த்தை தெரிவித்தனர்.
2 அங்குல உயரத்தில் மோடி சிலை
சேலம் தொழிலாளி கைவண்ணம்
செங்கோல் ஏந்திய மோடி சிலையை, 2 அங்குல உயரத்தில், 52 கிராம் வெள்ளியில் வடிவமைத்த சேலம் நகை பட்டறை தொழிலாளி, பிரதமரிடம் வழங்க, மாநில தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்துள்ளார்.
சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர், 43, தங்க நகை பட்டறை தொழிலாளி. 'துாய்மை இந்தியா' திட்டத்துக்கு பிரதமரை பாராட்டும்படி, 1.75 அங்குல உயரத்தில் வெள்ளி சிலையை தயாரித்து பிரதமரின் குடும்பத்தினர் மூலம் அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து லோக்சபாவில் ராஜராஜசோழனின் செங்கோலை நிறுவியதற்கு பிரதமர் மோடியை பாராட்டும் வகையில், 2 அங்குல சிலையை உருவாக்கி உள்ளார். இச்சிலையில் செங்கோல் பித்தளையாலும், பூமி உருண்டை, இரும்பு மூலமும் தயாரித்தவர், 52 கிராம் வெள்ளியில் மோடி உருவத்தை உருவாக்கி உள்ளார். இதை பிரதமருக்கு வழங்க, சேலத்தில் நடைபயணத்தில் ஈடுபட்ட பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம்
வழங்கினார்.
சென்னை விமானம் தாமதம்
சென்னையில் நேற்று காலை பனிமூட்டம் நிலவியது. அத்துடன் போகி பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் அங்குள்ள விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. குறிப்பாக அங்கிருந்து சேலத்துக்கு மதியம், 12:30க்கு வரவேண்டிய, 'இண்டிகோ' பயணியர் விமானம், 1:35க்கு வந்தது. ஒரு மணி நேரம் பயணியர் காத்திருந்தனர். இதனால், 12:50க்கு இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானம், 2:15 மணிக்கு புறப்பட்டது.
ஹோலி கிராஸ்
பள்ளியில்
பொங்கல் விழா
சேலம், அம்மாப்பேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சேசுராஜ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்படி மாணவர்களின் பல்வேறு நடனங்கள், இசை கச்சேரி நிகழ்த்தப்பட்டன. பானை உடைத்தல், பொங்கல் வைத்தல் சிறப்பாக நடந்தது.
வக்கீல் அன்பு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா செல்வ மாளிகை, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகி ஏசுதாசன், இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் குழந்தைசாமி, துவக்கப்பள்ளி துணை முதல்வர் சங்கீதா, மாணவ சங்கத்தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பிற அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
பொங்கல் கொண்டாடிய ஐ.ஜி., - டி.ஐ.ஜி.,
சேலம் மாவட்ட போலீஸ் சார்பில் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. எஸ்.பி., அருண் கபிலன் தலைமை வகிக்க, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பாவனீஸ்வரி, சேலம் டி.ஐ.ஜி., உமா பங்கேற்றனர். இவர்களுக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இதையடுத்து ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோர், போலீசாரின் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் மைதானத்தில் வலம் வந்தனர். பின் ஆண், பெண்களுக்கு தனித்தனியே கயிறு இழுத்தல் போட்டி நடந்து. அதில் உற்சாகமாக பங்கேற்றனர். அதேபோல் கோலம் வரைதல், சைக்கிள் ஓட்டுதல், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, ஐ.ஜி., பரிசு வழங்கினார். இதில் ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பென்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
சேலம் ஊரக போலீசார், அவர்களது குடும்பத்தினர், மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் ஊரக டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். போலீசார், அவரது குடும்பத்தினர்கள், மக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோல் சங்ககிரி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட இடைப்பாடி, பூலாம்பட்டி, தேவூர், கொங்கணாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி ஸ்டேஷகளில் பணிபுரியும் போலீசார், அவர்களது குடும்பத்தினருடன் இடைப்பாடியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் பொங்கல் வைத்து கொண்டாடினர். குழந்தைகளுக்கு ஊசியில் நுால்கோர்த்தல், சட்டி உடைத்தல், பாட்டு போட்டி நடத்தி வெற்றி பெற்றோருக்கு, சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா பரிசுகள் வழங்கினார்.
16 கைதிகளுக்கு
பொங்கல் 'பரோல்'
சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள், அவரவர் குடும்பத்தினரின் துக்கம், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆண்டுக்கு, 15 நாட்கள், 'பரோல்' வழங்கப்படுகிறது. அதை அவர்கள் பிரித்து பரோலில் செல்லலாம்.
அதன்படி பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட, சேலம் மத்திய சிறை கைதிகள், 48 பேர் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். இதில், 16 பேருக்கு பரோல் வழங்கப்பட்டதால், நேற்று சிறையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் புறப்பட்டனர்.
சந்தன கட்டை கடத்திய
பர்கூர் தம்பதி சிக்கினர்
திருப்பத்துார் அருகே, ஆட்டோவில் சந்தன கட்டை கடத்திய, பர்கூர் தம்பதி உள்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துாரை அடுத்த வெங்களாபுரம் அருகே, திருப்பத்துார் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆட்டோவில் பைகளுடன் மூன்று பேர் வந்தனர். பைகளை சோதனை செய்ததில், 10 கிலோ சந்தன கட்டை இருந்தது. மூவரையும் விசாரித்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த
ஒப்பந்தவாரி காளியப்பன், 55, அவர் மனைவி பாப்பா, 45, அவர்களது உறவினர் மாணிக்கம், 42, என தெரிந்தது.
பெங்களூருவில் இருந்து திருப்பத்துாரில் ஒருவருக்கு விற்பனை செய்ய, கொண்டு சென்றது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ சந்தன கட்டையை பறிமுதல்
செய்தனர்.