ADDED : ஜன 22, 2024 10:38 AM
விநாயகர் கோவிலில்
இ.பி.எஸ்., வழிபாடு
சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., வீடு அருகே வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. அதன் கும்பாபி ேஷக விழா, யாக சாலை பூஜையுடன் கடந்த, 19ல் தொடங்கியது. நேற்று முன்தினம், 3ம் கால யாக பூஜை முடிந்தது. நேற்று காலை, 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து, வரசித்தி விநாயகருக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அவரது குடும்பத்தினருடன், மக்களோடு நின்று வழிபட்டார். தொடர்ந்து விநாயகருக்கு நடந்த சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார். மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் உள்ளிட்ட, அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாயம்
சேலம், கிச்சிப்பாளையம், தேசிய புனரமைப்பு காலனியை சேர்ந்த சண்முகம் மனைவி மகாலட்சுமி, 66. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 19 மாலை, 3:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் சண்முகம், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் தேடுகின்றனர்.
சவுடேஸ்வரி அம்மன் கோவிவில் கும்பாபிேஷகம்
மேட்டூர், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் அறக்கட்டளை, தேவாங்க குல மக்கள், திருக்கோவில் திருப்பணி கமிட்டி சார்பில், ஆஸ்பத்திரி காலனியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று காலை நடந்தது.
தேவாங்க குல ஜகத்குரு சம்புசைல பீடாதிபதி ஜகத்குரு சந்திர மவுலீஸ்வரர் சுவாமிகள், ஹம்பி ேஹமகூட பீடாதிபதி தயாநந்தபுரி சுவாமிகள் ஆசியுடன், சாம்பள்ளி வெங்கடாசலபதி தலைமையில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
சிறப்பு அபி ேஷகம், ஆராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தேவாங்க சமூகத்தினர், மக்கள் வழிபட்டனர்.
ரூ.50க்கு 5 பழச்செடி
மக்களுக்கு அழைப்பு
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான மலர்கள், காய்கறி, பழங்கள் சாகுபடி செய்து, விவசாயிகள் தினமும் கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, சப்போட்டா ஆகிய, 5 வகை பழச்செடிகளை, மானியத்தில், 50 ரூபாய்க்கு வழங்குகிறோம். ஆதார் நகல், புகைப்படம் ஆகியவற்றை, தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து விவசாயிகள், மக்கள் செடிகளை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மாக் கடை மூடல்
பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞர் அணி மாநாடு நேற்று நடந்தது. இதற்கு வந்த, முதல்வர் ஸ்டாலின், வாழப்பாடியில் தங்கினார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தி.மு.க.,வினர் வந்தனர். இந்நிலையில் வாழப்பாடியில் புதுப்பாளையம் அருகே உள்ள இரு அரசு மதுக்கடைகள், பேளூர் பிரிவு சாலை அருகே உள்ள அரசு மதுக்கடை, நேற்று முன்தினம் மட்டுமன்றி, நேற்றும் மூடப்பட்டன.
கிணற்றில் தவறி விழுந்தவர் பலிசேலம், வீராணம் அருகே டி.பெருமாபாளையத்தை சேர்ந்த தங்கவேல் மகன் ராஜா, 32. இவர் கடந்த, 19 இரவு, 9:00 மணிக்கு, அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது கால் வழுக்கி கிணற்றில் விழுந்ததில் பலியானார். நேற்று முன்தினம் அவரது உடலை மீட்டு, வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாதாள சாக்கடையில் அடைப்புசாலையில் ஓடிய கழிவுநீர்
மேட்டூர், நீதிமன்ற வளாகம் அருகே அனல்மின் நிலைய குடியிருப்பு உள்ளது. அங்கு நேற்று காலை சாலை நடுவே உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தொட்டியில் இருந்து பீறிட்டு வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. அந்த நீரும் தொடர்ந்து செல்ல முடியாமல், அருகிலுள்ள வீட்டு முன்புறம் குட்டை போல் தேங்கியது. இதனால் வீசிய துர்நாற்றத்தால் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதுகுறித்து, 16வது வார்டு கவுன்சிலர் அமுதா கூறுகையில், ''நகராட்சி சார்பில் கழிவு நீரை அகற்றி கம்ப்ரசர் வேன் கொண்டு அடைப்பை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில்
கட்டணம் வசூலிக்கவில்லை
தி.மு.க., மாநாடு காரணமாக, சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நேற்று மேட்டுப்பட்டி டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று தி.மு.க., இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடந்தது. இதில், கலந்து கொள்ள, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள், சேலம், வாழப்பாடி வழியாக மாநாட்டு திடலை சென்றடைந்தன.
இந்த வழியில் மாநாட்டுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்றுவழியில் அனுப்பப்பட்டன.
இதனால், நேற்று காலை முதலே, சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகில் உள்ள மேட்டுப்பட்டி டோல்கேட் அனைத்து வழிகளும் திறக்கப்பட்டிருந்தன. அனைத்து வாகனங்களும், கட்டணம் வசூலிக்கப்படாமல், அனுமதிக்கப்பட்டன.