ADDED : பிப் 01, 2024 10:24 AM
பூண்டு விலை கிலோ
ரூ.380 ஆக உயர்வு
தமிழகத்தின் பூண்டு தேவையில், 80 சதவீதத்தை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்கள், 20 சதவீதத்தை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்கள் பூர்த்தி செய்கின்றன.
கடந்த டிசம்பர் முதல் வடமாநில பூண்டு வரத்து தொடர்ந்து சரிவை சந்தித்த நிலையில் தமிழகத்திலும் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.
இதனால் டிசம்பர் முதல் வாரம், சேலம், லீபஜாரில் ஒரு கிலோ, 240 ரூபாய்க்கு விற்ற பூண்டு, ஜனவரியில், 300 ரூபாயாக உயர்ந்தது. நேற்று முன்தினம், முதல் ரக பூண்டு, 310 ரூபாய், 2ம் ரகம், 280, பூண்டு உதிரி, 240 ரூபாய்க்கு விற்றது. நேற்று அதன் விலையில் கிலோவுக்கு, 30 ரூபாய் அதிகரித்தது. அதன்படி முதல் ரகம் 340 ரூபாய், 2ம் ரகம் 320 ரூபாய், உதிரி பூண்டு, 260 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த விலை ஏற்றத்தால் நீலகிரி பூண்டு முதல் ரகம் கிலோ, 340க்கு விற்றது, 380 ரூபாய், இரண்டாம் ரகம், 320க்கு விற்றது, 360 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பிப்., 6 முதல் சேலம் வழியே
'வந்தே பாரத்' சிறப்பு ரயில்
சென்னை - கோவை இடையே சேலம் வழியே பிப்., 6 முதல், 'வந்தே பாரத்' வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:சென்னை, சென்ட்ரலில், பிப்., 6 காலை, 7:10க்கு புறப்படும், 'வந்தே பாரத்' சிறப்பு ரயில் அன்று மதியம், 2:15 மணிக்கு கோவையை அடையும். மறுமார்க்கத்தில் மதியம், 3:05க்கு புறப்படும் ரயில், இரவு, 9:50 மணிக்கு சென்னையை அடையும். இந்த சிறப்பு ரயில் பிப்., 27 வரை செவ்வாய்தோறும் இயக்கப்படும். இந்த ரயில் சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும்.
ஜீவா பப்ளிக் பள்ளியில்
ஆண்டு விழா
சேலம், சேவம்பாளையம் ஜீவா பப்ளிக் பள்ளியில், 10ம் ஆண்டு விழா, 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் அரசினர் கலைக்
கல்லுாரி மேலாண்துறை தலைவர் டாக்டர் சரவணக்குமார் தலைமை ஏற்று, பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்
களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
'உன்னதமான இந்தியா' தலைப்பில் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக தாளாளர் பத்மநாபன் வரவேற்க, தலைவர் அங்கமுத்து வாழ்த்துரை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், செயலர் மணிவண்ணன், முதல்வர் மின்னல் கொடி, நிர்வாகிகள், ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.
சாலை மறியல்
307 பேர் மீது வழக்கு
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் கோட்டையில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து டவுன் வி.ஏ.ஓ., கோபிநாத் புகார்படி டவுன் போலீசார் விசாரித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் திருவேரங்கன் உள்பட, 307 பேர் மீது வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.
போட்டிபோட்டு சாலை மறியல்
2 தரப்பு மீதும் வழக்குப்பதிவு
காடையாம்பட்டி தாலுகா பூசாரிப்பட்டியில் தினசரி பூ மார்க்கெட் செயல்படுகிறது. ஓமலுார் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ளதோடு பூசாரிப்பட்டிக்கு செல்லும் சாலையில் காலை, மாலையில் விவசாயிகள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதும். இதனால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அப்பகுதியை கடக்கவே சிரமப்படுகின்றனர்.
நேற்று காலை, 9:15 மணிக்கு சந்தையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி, காடையாம்பட்டி பா.ம.க., ஒன்றிய செயலர் ராஜாமணி தலைமையில் மக்கள், பூசாரிப்பட்டி ஊருக்குள் செல்லும் சாலையில், 15 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். இதை கண்டித்தும், பூ வியாபாரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாக கூறியும், தாராபுரம் ஊராட்சி தலைவர் குருநாதன் தலைமையில் பூ வியாபாரிகள் போட்டியாக, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், 9:30 முதல், 9:45 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தீவட்டிப்பட்டி போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்
மேட்டூரில் கலெக்டர் துவக்கிவைப்பு
'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தை கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
அதில் மேட்டூர் வட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகள் தலைமையில், 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவை சேர்ந்த அதிகாரிகள், 48 வருவாய் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அரசு மேற்கொள்ள வேண்டிய திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, டி.ஆர்.ஓ., மேனகா, சேலம் உதவி கலெக்டர் சுவாதி(பயிற்சி), மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி பங்கேற்றனர்.
பழிக்குப்பழியாக கொன்றவரிடம்
'கிடுக்கிப்பிடி' விசாரணை
சேலம், பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி, 41. சலுான் கடை தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி, 19. இவர், பெற்றோர் எதிர்ப்பை மீறி, அன்னதானப்பட்டியை சேர்ந்த மோகன்லாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு, சகோதரர் கண்ணனின் மனைவி சாந்தி, 45, உதவியதாக, கருணாநிதி கருதினார். இதனால் சாந்தியை, கடந்த செப்., 18ல் கழுத்தறுத்து கொலை செய்தார். இதில் கருணாநிதியை போலீசார் கைது செய்த நிலையில், ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக கொலை செய்த, கண்ணனின் மகன் விக்னேஷ், 23, என்பவரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு, கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து, விக்னேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதில் தாயை கொன்றதற்கு பழி தீர்க்கும்படி கொலையை அரங்கேற்றியது, போலீசின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.