ADDED : பிப் 04, 2024 10:01 AM
அன்னை பெரியநாயகி
ஆலயத்தில் தேர் பவனி
கொளத்துார், சித்திரப்பட்டிபுதுார் ஊராட்சி பூமனுாரில் உள்ள அன்னை பெரியநாயகி ஆலயத்தில் கடந்த, 27ல் திருத்தல பெருவிழா கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை, சேலம் மூவேந்தர் அருள்பணி நிலைய இயக்குனர் கோபி இம்மானுவேல் தலைமையில் இறை புகழ்ச்சி, குணமளிக்கும் திருப்பலி நடந்தது. தொடர்ந்து சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. மாலையில் அன்னை பெரியநாயகி தேர் பவனி நடந்தது. அதில் ஆலயத்தை சுற்றி, 3 முறை பவனி வந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
வக்கீல் கூட்டமைப்பு
நிர்வாகிகளுக்குசான்றிதழ்
தமிழகம், புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் மாநில துணை தலைவராக, மேட்டூர் அணை வக்கீல் சங்க தலைவர் ஜேம்ஸ் சார்லஸ், மாநில துணை செயலராக செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்களாக, மேட்டூர் அணை வக்கீல் சங்க முன்னாள் நிர்வாகிகள் பிரபாகரன், பூபதி நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, மேட்டூரில் நேற்று முன்தினம் கூட்டமைப்பு மாநில துணை தலைவர்
சிவராமன் சான்றிதழ் வழங்கினார்.
திட்டச்சேரி மயானம்
பேச்சில் சமரசம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே திட்டச்சேரியில், 23 சென்டில், ஒரு பிரிவினர் மயானமாக பயன்படுத்தினர். அப்பகுதியில் மற்றொரு பிரிவினர், 3 சென்ட் இடம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். ஓராண்டாக இப்பிரச்னை இருந்தது. இதுகுறித்து வீரகனுார் போலீசார், தாசில்தார் விசாரிக்க பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக, 3 முறை நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.
நேற்று மாலை, தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் இரு பிரிவினரிடம் பேச்சு நடந்தது. ஒரு தரப்பினர், 'நாங்கள் பயன்படுத்திய மயான பகுதியையொட்டி, 5 சென்ட் நிலத்தை வாங்கி கொடுத்துவிடுகிறோம்.
எங்கள் மயானம் வழியே பாதை அமைத்து கொடுத்து விடுகிறோம். அத்துடன் சமாதானமாக செல்கிறோம்' என்றனர். இதை, மற்றொரு பிரிவினரும் ஏற்றனர். சுமுக தீர்வு ஏற்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர்.
ரூ.2.45 கோடிக்கு
ஆடுகள் விற்பனை
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. 3,630 ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 6,500 முதல், 6,750 ரூபாய்; 10 கிலோ செம்மறியாடு, 6,450 முதல், 6,600 ரூபாய் வரை விலைபோனது.
இதன்மூலம், 2.45 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
சங்கிலி பறிப்பு
2 பேருக்கு சிறை
சங்ககிரி, யாதவர் தெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி பிரேமா, 43. இவர், 2017 பிப்., 15 இரவு, 7:15 மணிக்கு அவரது வீடு முன், வாசலை பெருக்கிக்கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பிரேமா அணிந்திருந்த, 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்து, வெப்படையை சேர்ந்த கார்த்திகேயன், சேலத்தை சேர்ந்த மணிகண்டன், திருடுபோன சங்கிலியை வைத்திருந்ததாக, சேலம், தாசநாயக்கன்பட்டி ஆறுமுகம் மனைவி பிரேமா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் கார்த்திகேயன், மணிகண்டனுக்கு தலா, 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம், பிரேமாவுக்கு, 2,000 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து நீதிபதி பாபு நேற்று உத்தரவிட்டார்.
உதவித்தொகை தேர்வு
9,512 பேர் பங்கேற்பு
தமிழகத்தில் அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 8 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, 9 முதல் பிளஸ் 2 வரை மாதம், 1,000 ரூபாய் வீதம்
உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டு உதவித்தொகை தேர்வு தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் இத்தேர்வுக்கு, 40 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு, 3,953 மாணவர், 5,783 மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 3,842 மாணவர், 5,670 மாணவியர் தேர்வு எழுதினர். 224 பேர் வரவில்லை.
500 பேருக்கு அன்னதானம்
தே.மு.தி.க.,வின் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆத்துார், கிரைன்பஜாரில், அக்கட்சி நிறுவனர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட இளைஞர் அணி செயலர் முருகன், ஒன்றிய செயலர் பச்சமுத்து, முன்னாள் நகர செயலர்கள் சந்திரன், சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விபத்துக்கு காரணம் என்ன?
நாடகம் மூலம் விழிப்புணர்வு
விபத்து ஏற்படுதற்கான காரணம் குறித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, ஆத்துார் வட்டார போக்குவரத்து துறை சார்பில், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமை வகித்தார். அதில், 'சாரல் கலைக்குழு' சார்பில், விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
எமதர்மன், சித்ரகுப்தன் வேடமணிந்து வந்தவர்கள், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட், 4 சக்கர வாகனங்களில், 'சீட்' பெல்ட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்து குறித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.
டி.சி.எச்., ரக பருத்தி விலை
மூட்டைக்கு ரூ.900 உயர்வு
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. அதில் சுற்றுவட்டார விவசாயிகள், 3,400 மூட்டைகளை கொண்டுவந்தனர்.
அதில், 100 கிலோ பி.டி., ரகம் மூட்டை, 6,350 முதல், 7,410 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 10,800 முதல், 12,039 ரூபாய்; கொட்டு ரகம், 4,600 முதல், 5,810 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 93.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மூட்டைக்கு, டி.சி.எச்., ரகம், 900 ரூபாய், கொட்டு ரகம், 300 ரூபாய் அதிகரித்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
3 இடங்களில் தொடரும் விபத்து
வேகத்தடை அமைக்க முடிவு
பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி முன் கம்மாளப்பட்டி சாலை, சேலம் சாலை, மல்லுார் சாலை என, 3 சாலைகள் ஒன்று சேருகின்றன. அங்கு சாலை வளைவாக உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் குறித்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. அரளி பூ சரக்கு வாகனங்கள், மண், மணல், ஜல்லி ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தை குறைக்காமல் செல்கின்றனர். இதனால் அபாய வளைவில் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.
அதேபோல் ஏரிச்சாலை குறுகலாக உள்ளதால் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் காந்தி நகரில் அரசு வங்கி, டாஸ்மாக் கடை, குடியிருப்பு, வணிக கடைகள் உள்ளன. அங்கு வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து தொடர்கிறது. அதனால் சந்தைப்பேட்டை, காந்தி நகர், ஏரிச்சாலை ஆகிய இடங்களில் வேகத்தடை அமைக்க, டவுன் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை, பன
மரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், நெடுஞ்
சாலைத்துறை அதிகாரிகளுக்கு, தலைவி
பரமேஸ்வரி அனுப்பியுள்ளார்.
குழாய் உடைந்து 1 மாதமாக வீணாகும் குடிநீர்
சாலை சிதிலமடைந்து வாகன ஓட்டிகள் அவதி
கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அச்சாலை சிதிலமடைந்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியில், மெகா கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அங்கிருந்து வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஒன்றியங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய், சீரகாபாடி அருகே கடத்துார் அக்ரஹாரம் வேளாண் விரிவாக்க மையம் முன், 2 மாதங்களுக்கு முன் உடைந்தது. இதனால் தினமும் ஏராளமான குடிநீர், சாலையில் வழிந்து வீணாகி கொண்டிருக்கிறது. தொடர்ந்து வழியும் குடிநீரால் தார்ச்சாலை முற்றிலும் அரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது.
அந்த வழியே வேளாண் விரிவாக்க மையத்துக்கு விதை, உரம் உள்ளிட்ட பொருட்களை வாங்க வரும் விவசாயிகள், கால்நடை மருந்தகத்துக்கு ஆடு, மாடுகளை அழைத்து வருவோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.
சுதாகர் இ.என்.டி., நடத்திய
சிறப்பு பரிசோதனை முகாம்
சேலத்தில் உள்ள, டாக்டர் சுதாகர் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனையில் காது கேட்கும் திறன், காது கருவிகள் பொருத்தும் பிரிவு, 'சிக்னியா கேலக்ஸி' என, நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இலவசமாக, காது கேட்பு பரிசோதனை முகாம் இரு நாட்கள் நடந்தன.
௩௦௦க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்துகொண்டனர்.
காதின் உள் அளவை துல்லியமாக அளந்து இரைச்சல், வலி, காற்றின் மூலம் உண்டாகும் சத்தங்களை தவிர்த்து சரியான அளவில் காது கருவிகளை பொருத்தி பார்க்கும் வசதி, தமிழகத்தில் முதல்முறையாக, சுதாகர் இ.என்.டி., கேர் சென்டரில் அறிமுகப்படுத்தப்பட்டது. காதுக்கு உள்ளே வைக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத காது கேட்கும் கருவிகள், ரீசார்ஜ் செய்யக்கூடிய காது கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும் முதியோர் வீட்டுக்கே சென்று பரிசோதனை செய்தல், பழைய காது கருவிகளை புது கருவிகளாக மாற்றிக்கொள்ளுதல், விலையில் சிறப்பு சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக, முகாமில் தெரிவிக்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை டாக்டர் சுதாகர், தீபா, பிரணவ், பொது மேலாளர் சிவா, மேலாளர் ராதா ஆகியோர் செய்திருந்தனர்.