ADDED : பிப் 09, 2024 10:10 AM
வரும் 16ல், 5,000 பணிக்கு
வேலைவாய்ப்பு முகாம்
வரும், 16ல், 5,000 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 16 காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்க உள்ளது. அதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவை, காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள், 5,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், அனைத்து வித கல்வி தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள், வேலை நாடுனர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல், 0427 - -2401750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மீன்வளத்துறை கட்டிய
10 கடைகள் திறப்பு
மேட்டூர் மீன்வளத்துறை வளாகத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி மற்றும் மீன்வளத்துறை நிதி, 90 சதவீதம், மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்க நிதி, 10 சதவீதம் என, 43 லட்சம் ரூபாய் செலவில், 2015 - 16ல், 10 கடைகள் கட்டப்பட்டன. அப்பணி முடிந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பின் நேற்று, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், கடைகளை திறந்து வைத்தார். மீன்துறை துணை இயக்குனர் சுப்ரமணியன், உதவி இயக்குனர் உமா கலைச்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
தீக்குளித்த பெண் பலிமேச்சேரி, செம்மனுாரை சேர்ந்த பழனிசாமியின் மகள் பிரித்திகா, 21. இவர், 2020 மே, 28ல், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் சுதர்ஷன், 2. கடந்த, 28ல் உணவு சமைப்பது குறித்து, தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பிரித்திகா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி, 3 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணையும்
நடக்கிறது.
அரசு பள்ளியில்
முப்பெரும் விழா
ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் விஜயராகவன் தலைமை வகித்தார். ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் முருகபிரகாஷ், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விதைகள் அறக்கட்டளை, லயன்ஸ் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்பினரும், மாணவர்களை பாராட்டினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடந்தது.
அம்மன் கோவில் முன்
இறந்து கிடந்த முதியவர்
வாழப்பாடி அருகே சந்திரபிள்ளைவலசை சேர்ந்தவர் பாட்ஷா பாய், 74. இவர், 18 ஆண்டுகளுக்கு முன் நரசிங்கபுரத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சில நாட்களாக உடல் நல குறைவால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் நரசிங்கபுரம் திரவுபதி அம்மன் கோவில் முன் துாங்கியுள்ளார். ஆனால் நேற்று காலை அவர் இறந்து கிடந்தார். ஆத்துார் டவுன் போலீசார், உடலை மீட்டு, முதியவரின் உறவினர்களை வரவழைத்து ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் கையை இழந்தவருக்கு
ரூ.67 லட்சம் வழங்க உத்தரவு
சேலம் மாவட்டம் ஓமலுார், செல்லப்பிள்ளை குட்டை, குப்பாண்டியூரை சேர்ந்தவர் மணி, 31. டிரைவரான இவர், 2022 ஏப்., 29ல் மகாராஷ்டிரா மாநிலம் கரிமலா நகரில் லாரியை ஓட்டிச்சென்றபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.
அதில் அவரது வலது கை வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் தொழில் செய்ய
முடியாது எனக்கூறி இழப்பீடு கேட்டு, சேலம்
சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 67.21 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, நீதிபதி இந்து லதா நேற்று முன்தினம்
உத்தரவிட்டார்.
18,216 பேருக்கு ரூ.96 கோடி கடனுதவி
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நேற்று, 18,216 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 96.84 கோடி ரூபாய் வங்கி கடனுதவி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதற்கு தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: ஊரக பகுதிகளில், 13,799, நகர் பகுதிகளில், 7,083 என, 2,55,943 மகளிர் அடங்கிய, 20,882 குழுக்கள் செயல்படுகின்றன. இதில் உள்ள மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஆண்டுதோறும் வங்கி கடன் இணைப்பு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கு, 1,124 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, 1,109 கோடி ரூபாய் கடனுதவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று(நேற்று), 93.55 கோடி ரூபாய் வங்கி கடனுதவி, சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், 3.29 கோடி என, மொத்தம், 96.84 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 1,518 குழுக்களை சேர்ந்த, 18,216 மகளிர் பயன்பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
திருக்கல்யாணம் கோலாகலம்
இன்று தேர் திருவிழா
ஆத்துார் அருகே தளவாய்பட்டியில் உள்ள மலை அடிவாரத்தில் சன்னாசி வரதன் கோவில் உள்ளது. அதன் வளாகத்தில் வேணுகோபால சுவாமி, சுப்ரமணியர், ஆஞ்சநேயர் சுவாமி கோவில்கள்
உள்ளன.
தை அமாவாசையான இன்று இக்கோவிலில் தேர் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று திருக்கல்யாண வைபோகம் நடந்தது. அப்போது, வள்ளி, தெய்வானை சுப்ரமணியர், ராதா, ருக்மணி, வேணுகோபால சுவாமிகளுக்கு, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து பட்டாடையுடன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மணக்கோல அலங்காரத்தில் சுப்ரமணியர், வேணுகோபால சுவாமிகள் அருள்பாலித்தனர்.
மாலை, 4:30 மணிக்கு, சுப்ரமணியர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று மதியம், 2:00 மணிக்கு ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
காரை திருப்பியபோது
பள்ளத்தில் கவிழ்ந்தது
கெங்கவல்லி அருகே, உலிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் ரவிச்சந்திரன், 40. இவர் தனது குடும்பத்தினருடன் ஆம்னி காரில், 74.கிருஷ்ணாபுரம் பகுதியில் உறவினர் வீட்டிற்கு, கோவில் விழா அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, அதே காரில் வந்துள்ளார்.
காலை, 8:00 மணியளவில் கூடமலை, உப்பாத்து ஓடை பகுதியில், சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க, 'பிரேக்' போட்டு காரை திருப்பியுள்ளார். அப்போது, சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ரவிச்சந்திரன், சின்னதம்பி, வெள்ளையன் மற்றும் ஒன்பது வயது சிறுவன் பகலவன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுண்ணறிவு பிரிவு
எஸ்.எஸ்.ஐ.,க்கள்
மாற்றம்
சேலம் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ.,க்களை மாற்றம் செய்து கமிஷனர் விஜய
குமாரி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பள்ளப்பட்டி
எஸ்.எஸ்.ஐ., முத்துசாமி, அன்னதானப்பட்டிக்கும், அங்கு பணியாற்றிய கார்த்தி, ஆட்டையாம்பட்டிக்கும், கொண்டலாம்பட்டி சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.ஐ., அன்பழகன், பள்ளப்பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். டவுன் போலீஸ் ஸ்டேஷன் செந்தில்குமார், சிறை பிரிவுக்கும், கருப்பூர் நுண்ணறிவு ஏட்டு காவேரி, காரிப்பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சிங்கிபுரம் மின்தடை
இன்று ரத்து
சேலம், சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் இன்று நடைபெற இருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து செயற்பொறியாளர் முல்லை விடுத்துள்ள அறிக்கை: சேலம், சிங்கிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று நடைபெற இருந்த மின்தடை, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டப்பணிக்கு
பூமி பூஜை விழா
அயோத்தியாப்பட்டணம் அடுத்த சுக்கம்பட்டி, எம்.பெருமாபாளையம், அதிகாரிப்பட்டி, காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
தி.மு.க.,வின் தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமார், பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காரிப்பட்டியில் சாலை, விவசாய குடோன் உள்ளிட்ட பணிக்கு பூமிபூஜை போடப்பட்டது. ஒரே நாளில் அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில், 1 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணி தொடங்கி வைக்கப்பட்டது. டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
நோயாளியிடம் மொபைல்
போன் திருடியவர் சிக்கினார்
சேலம் அரசு மருத்துவமனையில், நோயாளியிடம் மொபைல் போன் திருடியவர் சிக்கினார்.
சேலம், அரசு மருத்துவமனையின் இதய நோயாளிகள் சிகிச்சை பிரிவில் பாபு, 52, என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு, 7:00 மணிக்கு அவர் துாக்க நிலையில் இருந்த போது, மர்ம நபர் அவரின் மொபைல் போனை எடுத்துக் கொண்டு ஓடினார். பாபு கூச்சலிடவே, சக நோயாளிகள், உறவினர்கள் திருட்டில் ஈடுபட்டவரை பிடித்து கவனிப்பு செய்து, அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 37, என்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை குறி வைத்து, இவர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ., தேர்தல் பணிக்குழு கூட்டம்
ஆத்துார் அருகே, கொத்தாம்பாடியில் நேற்று, பா.ஜ., சார்பில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தேர்தல் பணிக்குழு மற்றும் சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் சம்பத், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளிலும், பா.ஜ.,வுக்கு அதிகளவில் ஓட்டு கிடைக்கும் வகையில், தேர்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தி பேசினார். மாநில செயலர் அஸ்வத்தாமன், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,
கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து, நேற்று சேலம் கோட்டையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்க மறுப்பது, கவர்னர்களை பயன்படுத்தி சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சண்முகராஜா தலைமையில் நடந்தது. தி.மு.க., மாவட்ட செயலர்கள் சிவலிங்கம், ராஜேந்திரன், செல்வகணபதி, மாநகர் மாவட்ட காங்.,தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மோகன், ம.தி.மு.க., மாவட்ட செயலர் சங்கேஸ்வரன், வி.சி., மாநகர செயலர் காஜாமொய்தீன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மஞ்சவாடி கணவாயில்
விபத்து: டிரைவர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தட்டாம்பட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 21, டாரஸ் லாரி டிரைவர். ஓசூரிலிருந்து பழைய இரும்பு லோடு ஏற்றிய லாரியை, துாத்துக்குடிக்கு நேற்று முன்தினம் ஓட்டிச்சென்றார்.
மதியம், 1:00 மணிக்கு, மஞ்சவாடி கணவாயில் வந்தபோது, 'பிரேக்' பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் மொபட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி பள்ளத்தில் விழுந்தது.
இதில் நவீன்குமார் சம்பவ இடத்தில் பலியானார். அவருடன் வந்த செங்கத்தை சேர்ந்த சிபிராஜ், 20, மொபட்டில் நின்றிருந்த வீராணத்தை சேர்ந்த பெருமாள், 55, ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
தலைவாசல் அருகேயுள்ள, வீரகனுார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன். இவர், கருமந்துறைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த காந்திமதி, வீரகனுார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று வீரகனுார் ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

