sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்


ADDED : பிப் 14, 2024 09:52 AM

Google News

ADDED : பிப் 14, 2024 09:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாரியில் சேலை சிக்கி

சேலை வியாபாரி பலி

மொபட்டில் சென்ற சேலை வியாபாரி மீது லாரி மோதியது. இதில் அவரது சேலை, லாரியில் சிக்கி, 50 அடி துாரம் இழுத்துச்செல்லப்பட்டதில் உடல் நசுங்கி பலியானார்.

சேலம், மெய்யனுார், அண்ணாபுரம் பிரதான சாலையை சேர்ந்த சரவணன் மகள் சந்தியா, 22. ஈரோட்டில் இருந்து சேலைகளை வாங்கி வந்து, 'ஸ்கூட்டி பெப்' மொபட்டில் வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று காலை, 9:00 மணிக்கு, ஈரோட்டில் சேலை வாங்குவதற்கு மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். சேலம், உத்தமசோழபுரம் அருகே சூளைமேட்டில் சென்றபோது, மொபட் பின்புறம் லாரி மோதியது. சந்தியா ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், அவரது சேலை லாரியில் சிக்கிக்கொண்டது. இதில், 50 அடி துாரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்ட அவர், உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். கொண்டலாம்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

பள்ளத்தை சீரமைக்காமல் தடுப்பு

ஆத்துார், புதுப்பேட்டை வழியே சேலம் - சென்னை; ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இதில், ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலை நுழைவு பகுதியில் வேளாண் கூட்டுறவு சங்கம் எதிரே, சில மாதங்களுக்கு முன் குடிநீர் குழாய் பழுதானது. அதன் சீரமைப்புக்கு பின், இரு இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.

அந்த பள்ளத்தை சரிசெய்யவில்லை. மாறாக சாலை நடுவே இரும்பு தடுப்பு வைத்துள்ளனர். இதனால் இரவில் அந்த வழியே மொபட், பைக்குகளில் செல்வோர், தடுப்பு மீது மோதி விழுகின்றனர். மேலும் இரு தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு பகுதி என்பதால், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

நிதி உதவி பெற முகாம்:

விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் கவுரவ நிதி உதவி பெற நடத்தப்படும் சிறப்பு முகாமில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:

விவசாயிகளுக்கு பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில், நிலமுள்ள விவசாயிகளுக்கு, 4 மாதங்களுக்கு ஒருமுறை, 2,000 வீதம் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வேளாண் இடுபொருட்கள் வாங்க ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதுவரை, பி.எம்.கிஷான் திட்டத்தில், 15 தவணைகள் வரை பணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெறாத விவசாயிகள், இத்திட்டத்தில் இணையலாம். அத்துடன் ஏற்கனவே பயன்பெற்ற விவசாயிகள், வங்கி கணக்கு பரிவர்த்தனை விபரங்களை பதிவு செய்ய வசதியாக, பிப்., 21 வரை கிராமங்களில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம்.

பாகிஸ்தானில் அமைகிறது கூட்டணி அரசு

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து, 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்த உடனே, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற, 101 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மேலும், பாக்., முஸ்லிம் லீக் -நவாஸ் 75; பாகிஸ்தான் மக்கள் கட்சி 54; முட்டாஹிதா குவாமி இயக்கம் -பாக்., 17 இடங்களைக் கைப்பற்றின. ஆட்சி அமைக்க, 133 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாக்.,கில் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் - முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோவின், பாக்., மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்துள்ளன. இந்தத் தகவலை இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று உறுதிப்படுத்தினர். நவாஸ் ஷெரீபின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப், 72, மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

மொபட் திருடிய

2 பேர் கைது

சேலம், பள்ளப்பட்டி, ஏரிக்காட்டை சேர்ந்தவர் முகுராம், 38. இவர் வீடு அருகே, கண் கண்ணாடி கடை வைத்துள்ளார். கடந்த, 6 இரவு, வீடு முன், டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காணவில்லை. அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார், அப்பகுதி, 'சிசிடிவி கேமரா' பதிவை ஆய்வு செய்ததில் மொபட் திருடர்கள் சிக்கினர். அதன்படி அம்மாபேட்டை, குமரன் காலனியை சேர்ந்த ஜான்பீட்டர், 28, அவரது கூட்டாளியான பொன்னம்மாபேட்டை, மிலிட்டரி சாலையை சேர்ந்த ரஞ்சித், 21, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வாக்குமூலப்படி, மொபட் மீட்கப்பட்டது.

மாணவ, மாணவியருக்கு

நாளை 'கல்வி கடன் மேளா'

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், பிப்., 15(நாளை) காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில், 'கல்வி கடன் மேளா' நடக்க உள்ளது. இதில் கல்வி கடன் தேவைப்படும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் படித்து வரும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். ஏற்கனவே கல்வி கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, புதிதாக தேவைப்படுவோர், இந்த முகாமில் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ - ஐ.டி.ஐ., படிப்பதற்கும், பிளஸ் 2 படித்தவர்களுக்கு பட்டப்படிப்புக்கும், கல்லுாரி முதலாண்டு முதல், கல்லுாரியில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ரேஷன், ஆதார், பான் கார்டுகள், ஜாதி, வருமான சான்றிதழின் நகல்களை கொண்டு வர வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

6 பெட்ரோல் பங்க் 'சீல்'

பேச்சில் கால அவகாசம்

சேலம் மாநகராட்சியில் நிலுவை வரி இனங்களை வசூலிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் புது பஸ் ஸ்டாண்ட், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி கடைகளில், வாடகை செலுத்தாத, 20க்கும் மேற்பட்ட கடைகள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. மேலும் வரி நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கி, 'சீல்' வைக்கும் பணி நடக்கிறது. அதன்படி நேற்று கொண்டலாம்பட்டி மண்டலத்தில், 6 பெட்ரோல் பங்க்குகளுக்கு, மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். பின் நிர்வாகத்தினர் நடத்திய பேச்சில் மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கூறுகையில், ''பங்க்' நிர்வாகத்தினர், இரு நாட்களில் நிலுவை வரியை செலுத்திவிடுவதாக உத்தரவாதம் அளித்ததால் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் செலுத்தாவிட்டால், 'சீல்' வைக்கப்படும்,'' என்றார்.

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., மனித உரிமை பிரிவு சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலர் நிஜாம் தலைமை வகித்தார். அதில் வர உள்ள லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு முறையை கைவிட்டு ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். மாவட்ட தலைவர் ஷானு, பொருளாளர் சோட்டா பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பணிகளை விரைந்து முடிக்க

கலெக்டர் அறிவுறுத்தல்

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தில், வீரபாண்டி ஒன்றியம் மூடுதுறை ஊராட்சியில், 8.15 லட்சம் ரூபாய் மதிப்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம் வெட்டும் பணி நடக்கிறது. இப்பணியை கலெக்டர் பிருந்தா தேவி நேற்று ஆய்வு செய்தார். அதேபோல் பெருமாம்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள், முருங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 'கனவு பள்ளி' திட்டத்தில், 5.26 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள, மேம்படுத்தப்பட்ட பள்ளி கட்டடத்தை பார்வையிட்டார்.

மேலும் வீரபாண்டி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தில், 1.86 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம், 'உரிய நேரத்தில் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என அறிவுறுத்தினார். ஒன்றிய கமிஷனர் சுகந்தி, பி.டி.ஓ., கவுரி(கி.ஊ.,) உடனிருந்தனர்.

மின் நுகர்வோருக்கு

16ல் குறைதீர் கூட்டம்

வாழப்பாடி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும், 16 காலை, 11:00 மணிக்கு, சிங்கிபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடக்க உள்ளது. வட்ட மேற்பார்வை பொறியாளர் தெண்டபாணி தலைமை வகிப்பார். அதனால் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகள், கோரிக்கைகளை மனுவாகவும், நேரில் தெரிவித்தும் நிவர்த்தி பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு

இருக்கைகள் வழங்கல்

சேலம் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் சேலம் அரசு மருத்துவமனைக்கு, 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில், கிரானைட் கற்களால் செய்யப்பட்ட, 13 இருக்கைள் நேற்று வழங்கப்பட்டன. ரோட்டரி மாவட்ட ஆளுனர் ராகவன், அரசு மருத்துவமனை தலைவர் மணி, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர். கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் நடேஷ்ராஜா, செயலர் குமரேஷ், துணை ஆளுனர் மகதீஸ்வரன், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அம்மன் கோவிலில்பால்குட ஊர்வலம்

கெங்கவல்லி அருகே கூடமலை முண்டக கன்னி அம்மன் கோவிலில் நேற்று, மாசி முதல் நாள் திருவிழா நடந்தது. இதற்கு சுவேத நதியில் இருந்து, முண்டக கன்னி அம்மனுக்கு சக்தி கரகத்துடன் சக்தி அழைத்தல், முளைப்பாரி, பால், பன்னீர், சந்தன குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வந்த பால், பன்னீர், சந்தனத்தால் அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். பின் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் அம்மன், சூரிய பகவான், நவலிங்கம், ராம ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு, பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

தி.மு.க.,வை கண்டித்துஅ.தி.மு.க., பிரசாரம்

அ.தி.மு.க.,வின் பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றியம் சார்பில் மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் ஜெகநாதன் தலைமை வகித்தார். அதில், தி.மு.க., அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, பலர் பேசினர். சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலர் தமிழ்மணி, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி, மல்லுார் நகர அம்மா பேரவை செயலர் பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பைக் மோதிவிவசாயி பலி

வாழப்பாடி அருகே பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த, விவசாயி அண்ணாமலை, 70. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு மேட்டுப்பட்டி, பத்தால்கால்மேடு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி வந்த, 'சைன்' பைக், அவர் மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட அவரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை, அவர் உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார், பைக்கை ஓட்டி வந்த, சேலம் டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்த சுபேர், 30, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

குழந்தையுடன்தாய் மாயம்

மேட்டூர் அருகே கோவிலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன், 31. இவரது மனைவி பவித்ரா, 28. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. பாலகிருஷ்ணின் தம்பி நாகார்ஜூன், 29. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு, 9 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். கடந்த, 9ல், பவித்ரா, சசிகலா அவரவர் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். பின் திரும்பி வரவில்லை. இதுகுறித்து நேற்று பாலகிருஷ்ணன் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

காஸ் கசிந்து தீமூதாட்டி சாவு

மேச்சேரி, மல்லிகுந்தம் ஊராட்சி பாட்டன் தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி சின்னதாயி, 66. நேற்று முன்தினம் இரவு காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து தீப்பற்றியது. இதில் தீக்காயம் ஏற்பட்ட சின்னதாயி ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை உயிரிழந்தார்.

மலை கிராமத்துக்கு

ரூ.66 லட்சத்தில் சாலை

பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சியில், 'நபார்டு' திட்டத்தில், 66 லட்சம் ரூபாய் மதிப்பில், புது மாரியம்மன் கோவில் முதல் வேடப்பட்டி மலைக்கிராமத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். தி.மு.க.,வின், மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா, சாலை பணியை தொடங்கி வைத்தனர்.

அதேபோல் அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சி சின்னகொண்டலாம்பட்டியில் ஒன்றிய கவுன்சிலர் நிதி, 18 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தி.மு.க., ஒன்றிய செயலர் உமாசங்கர், ஒன்றிய குழு துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேட்டூரில் விரைவில்

தொழிலாளர் நல நீதிமன்றம்

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் சுற்றுப்பகுதியில் தான், 400 நிறுவனங்கள் உள்ளன. அதற்கேற்ப மற்ற பகுதிகளை விட மேட்டூரில் தான் தொழிலாளர் வழக்குகள் கூடுதலாக உள்ளன. இதனால் தொழிலாளர் நல நீதிமன்றத்தை மேட்டூரில் அமைக்க, மேட்டூர் அணை வக்கீல் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அங்குள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம், சார்பு, மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர், 1, 2 என, 5 நீதிமன்றங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. தற்போது, 6வதாக, தொழிலாளர் நல நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு வளாகத்தில் புதர்மண்டி காணப்பட்ட பகுதிகள், குப்பை, நேற்று பொக்லைன் மூலம் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன.

கொப்பரை விலை

கிலோவுக்கு ரூ.4 சரிவு

சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. குளிர் முடிந்து வெயில் காலம் தொடங்கியதால் விவசாயிகள், 4,064 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர்.

இரு வாரங்களுக்கு முன் அதிகபட்ச விலையில் கிலோ கொப்பரைக்கு, 88 ரூபாய் கிடைத்த நிலையில் நேற்று, 84 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். அதேபோல் குறைந்தபட்சமாக, 66 ரூபாய் கிடைத்த நிலையில், நேற்று, 63 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். இதன்மூலம், 3.22 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

ஹெல்மெட் அணிய

விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ஓமலுாரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வாகன ஆய்வாளர் கவிதா தலைமை வகித்தார். ஆர்.சி.செட்டிப்பட்டியில், சேலம் துணை போக்குவரத்து கமிஷனர் பிரபாகரன், தொடங்கி வைத்தார். அதில் காரில் சீட் பெல்ட் அணிந்தும், இருசக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணிந்தும் பயணிக்க அறிவுறுத்தி, 100க்கும் மேற்பட்ட கார், பைக்குகளில் ஏராளமானோர் அணிவகுத்து சென்றனர். சேலம் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பேரணி நிறைவு பெற்றது. ஓமலுார் இன்ஸ்பெக்டர் லோகநாதன், போக்குவரத்து போலீசார், டிரைவர்கள், பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், வாகன டீலர்கள் பங்கேற்றனர்.

கரபுரநாதர் கோவிலில்

'கியூ ஆர்' கோடு வசதி

சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள், நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் வசதி கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன், அன்னதான டோக்கன், அர்ச்சனை டோக்கன்கள், பி.ஓ.எஸ்., எனும் கையடக்க கருவி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தலாம். இல்லையெனில் நேரடியாக வங்கி கணக்கில் காணிக்கை, அன்னதான நன்கொடைகளை செலுத்தும்படி இரு வித, 'கியூ ஆர் கோடு' வசதி அறிமுகம் செய்து பேனரில் அச்சடித்து வைத்துள்ளனர். இதன்மூலம் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், மொபைல் போன் செயலி மூலம், 'க்யூ ஆர்' கோடை ஸ்கேன் செய்து எளிதாக பணம் அனுப்ப முடியும்.

வாகனங்கள் நிறுத்தம்: ஆம்புலன்ஸூக்கு இடையூறு

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்துார் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நோயாளிகள், அவர்களுடன் வருவோர், பைக், மொபட் உள்ளிட்ட வாகனங்களை, மருத்துவமனை வெளியே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்திச்செல்கின்றனர். இதனால் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்குள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. மேலும் சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. அதனால் மருத்துவமனை முன் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையில் பள்ளம்: சறுக்கும் வாகனம்

இளம்பிள்ளை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வளைவுப்பகுதி உள்ளது. அங்கு 3 சாலை சந்திப்பில் சாலை அரித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு பஸ் ஸ்டாப் உள்ளதால், இறங்க வேண்டிய பயணியர் சிலர் படியில் தொங்கியபடி வருகின்றனர். ஆனால் பள்ளத்தில் ஏறி இறங்கும்போது தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் வளைவை வேகமாக கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் மோதல்: போலீஸ் எச்சரிக்கை

இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 படிக்கின்றனர்.

அதில் வணிகவியல் பிரிவை சேர்ந்த மாணவர், நேற்று காலை அருகே உள்ள கணிதம், கணினி பிரிவு வகுப்பறைக்கு சென்று துாங்கியுள்ளார். அப்போது அந்த வகுப்பறையில் இருந்த, பிளஸ் 2 மாணவர், 'எங்கள் வகுப்பறையில் வந்து ஏன் படுத்துக்கொண்டிருக்கிறாய்' என கேட்டார். அதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாலை வகுப்பு முடிந்ததும், கணிதம், கணினி பிரிவை சேர்ந்த சில மாணவர்கள், துாங்கிய மாணவரை அடித்தனர். பதிலுக்கு அவரும், அவரது வகுப்பறையை சேர்ந்த வணிகவியல் பிரிவு மாணவர்களும் தாக்கினர்.

இரு தரப்பு மோதலை அறிந்து, அந்த வழியே வந்த, இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், இடைப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உடனே வந்து, மாணவர்கள் சண்டையை நிறுத்தினர். பின் இருதரப்பினரையும் எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us