sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்


ADDED : பிப் 16, 2024 09:49 AM

Google News

ADDED : பிப் 16, 2024 09:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.பி.எஸ்.இ., தேர்வு தொடக்கம்

சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு நாடு முழுதும் நேற்று தொடங்கியது. 10ம் வகுப்பு தேர்வு மார்ச், 13 வரையும், பிளஸ் 2 தேர்வு, ஏப்., 2 வரையும் நடக்கிறது. இத்தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில் ஜெய்ராம் பப்ளிக், செந்தில் பப்ளிக், ஜெய்வின்ஸ் அகாடமி, எமரால்டு வேலி, பாரதியார் ஹைடெக், ஜீவா பப்ளிக், வாகீஸ்வரி வித்யாலயா, சிவாஜி நகர், ஆனந்தாஸ்ரமம், அயோத்தியாப்பட்டணம், கொண்டலாம்பட்டி வித்யா மந்திர் என, 11 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 3,410 மாணவ, மாணவியர், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 2,482 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். ஆனால் நேற்று நடந்த பாடங்களை, சேலம் மாவட்டத்தில் சில மாணவர்களே தேர்வு செய்திருந்ததால், அவர்கள் மட்டும் எழுதினர்.

முக்கிய பாட தேர்வுகள், பிப்., 20 முதல் நடக்கின்றன. தேர்வு கண்காணிப்பு பணிகளை, சி.பி.எஸ்.இ., போர்டு நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

ஆளில்லா வீட்டை நோட்டமிட்டு

கொள்ளையடிக்கும் கும்பல்

வாழப்பாடி, அய்யாகவுண்டர், 2வது தெருவை சேர்ந்தவர் மலர்கொடி, 65. இவர் நேற்று முன்தினம் சென்னை சென்று விட்டு நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டுக்கு

வந்தார்.

அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த பணம், 1.5 பவுன் நகைகள் திருடுபோனது தெரிந்தது. மலர்கொடி உறவினர் வெங்கடேஷ் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல் மலர்கொடி வீடு அருகே, ஆளில்லாத இரு வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதன்மூலம் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொள்ளையடித்து வருவது தெரியவந்துள்ளது. அதனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு வெடித்ததில் தீ

காயம் அடைந்தவர் பலி

சேலம், இரும்பாலை அருகே எஸ்.கொல்லப்பட்டி, குழி இருசாயி அம்மன் கோவில் பண்டிகையையொட்டி, கடந்த, 12 காலை, 9:50 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில் இடைப்பாடி அருகே கச்சுப்பள்ளியை சேர்ந்த சக்திவேல், 27, பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தார். அதே நேரம், வெடிக்காத ராக்கெட் பட்டாசுகளை, பைக்கில் மொத்தமாக வைத்து கால்நடை மருந்தகம் அருகே நிறுத்தியிருந்தார்.

இதில் சக்திவேல் விட்ட ராக்கெட் பட்டாசு, மொத்தமாக வைத்திருந்த பட்டாசில் பட்டதால் அனைத்தும் வெடித்து தீப்பற்றியது. இதில் சக்திவேல், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கவின், 8, ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வி.ஏ.ஓ., சரவணன் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று காலை, மருத்துவமனையில் சக்திவேல் உயிரிழந்தார்.

மின் தொழிற்சங்கங்கள்

இன்று வேலைநிறுத்தம்

தமிழக மின்வாரியம், 2010 நவ., 11ல் மின் உற்பத்தி, பகிர்மானம், வினியோகம் என, 3 கழகங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தை, பசுமை மின் உற்பத்தி, பகிர்மானம், அனல்மின் உற்பத்தி கழகம் என, 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்றாக பிரித்த அரசாணையை வாபஸ் பெறுதல்; 2022 மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுதல்; மின் ஊழியர்களை பாதிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தல்; 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஐக்கிய சங்கம், மின் ஊழியர் சம்மேளனம் உள்பட, 4 தொழிற்சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். அதற்கான ஆயத்த கூட்டம் மேட்டூர் மின் பகிர்மான வட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. திட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்து உரிய ஆலோசனை வழங்கினார். கோட்ட தலைவர் மணி, துணைத்தலைவர் கலையரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

24ல் குடும்ப நல

அறுவை சிகிச்சை:

தாய்மார்களுக்கு அழைப்பு

சேலம், கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெயந்தி அறிக்கை:

கன்னங்குறிச்சியில் நவீன லேப்ரோஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் வரும், 24ல் நடக்க உள்ளது. பங்கேற்கும் தாய்மாருக்கு, 22 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இரு குழந்தைகளை, சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்த தாய்மார்கள், ஒரு சுக பிரசவம், ஒரு அறுவை சிகிச்சை செய்தவர்கள், இரு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்த பின், 24 மணி நேரத்துக்கு பின் வீட்டுக்கு சென்று விடலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தாய்மார்களுக்கு வங்கி கணக்கு மூலம், 600 ரூபாய் வழங்கப்படும். முகாமுக்கு ஒரு நாள் முன் வரவேண்டும். விவரங்களுக்கு வட்டார சுகாதார புள்ளியியலாளர் விஜயகுமாரை, 97904 62426 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கரபுரநாதர் கோவிலில்

ரூ.1.56 லட்சம் காணிக்கை

சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரார்த்தனை, அன்னதானம் என இரு உண்டியல்கள் உள்ளன. அதில் பிரார்த்தனை உண்டியல், 4 மாதங்களுக்கு பின், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கதிரேசன், தக்கார் விமலா முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கைகள் பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன. அதில், 1,56,998 ரூபாய் இருந்தது. செயல் அலுவலர் பிரேமா உடனிருந்தார்.

சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம் வழியே டாட்டா நகர் - எர்ணாகுளம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டாட்டா நகர் - எர்ணாகுளம் சிறப்பு ரயில் வரும், 19, 26 அதிகாலை, 5:15க்கு புறப்பட்டு விஜயவாடா, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே செவ்வாய் நள்ளிரவு, 1:55க்கு எர்ணாகுளத்தை அடையும். சேலம் ஜங்ஷனுக்கு செவ்வாய் மாலை, 6:22க்கும், ஈரோட்டுக்கு, 7:30க்கும் வந்து

செல்லும்.

மறுமார்க்கத்தில் பிப்., 22, 29 காலை, 7:15க்கு கிளம்பி, சனி அதிகாலை, 4:35க்கு டாட்டா நகரை அடையும். ஈரோட்டுக்கு வியாழன் மதியம், 1:35க்கும், சேலத்துக்கு, 2:47க்கும் வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

பெரியார் பல்கலை முன்

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம் பெரியார் பல்கலையில் பொறுப்பு பதிவாளராக பணியாற்றிய தங்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதன் மீது ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், இரு நபர் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது.

கடந்த வாரம் அதன் அறிக்கை, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க, உயர்கல்வித்துறை அரசு முதன்மை

செயலர் கார்த்திக், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உத்தரவிட்டார். அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில், 12 நாள் மருத்துவ விடுப்பில் தங்கவேலு

சென்றார்.

இதை கண்டித்து, பல்கலை வளாகம் முன், சேலம் மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலர் பவித்ரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் துணை வேந்தர், பதிவாளர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர். ஒரு மணி நேரத்துக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

ஆனைமடுவு அணையில்

பாசனத்துக்கு நீர் திறப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும்படி ஆனைமடுவு அணை உள்ளது. அதன்மூலம் சுற்றுவட்டார கிராமங்களில், 5,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நேற்று, 33 அடியில், 53.30 மில்லியன் கன அடி நீர் தேங்கியிருந்தது.

இந்நிலையில் புது பாசன பகுதிகளுக்கு பிப்., 15(நேற்று) காலை, 8:00 மணி முதல், வலது, இடது புற கால்வாய்கள் மூலம் வினாடிக்கு, 50 கன அடியாக, 4 நாட்களுக்கு, 17.28 மில்லியன் கன அடி நீர் திறக்க வேண்டும். வரும், 19 காலை, 8:00 மணி முதல், பழைய பாசன பகுதிகளுக்கு அணையின் தலைமை மதகு மூலம், வினாடிக்கு, 50 கன அடி வீதம், தொடர்ந்து, 5 நாட்களுக்கு, 21.60 மில்லியன் கன அடிக்கு சிறப்பு நனைப்பாக, அணை நீர் இருப்பை பொறுத்து திறக்க அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி நேற்று காலை, 8:00 மணிக்கு, அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக பூஜை போடப்பட்டது. இதில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி உள்ளிட்ட அதிகாரிகள், பாசன விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள், மலர் துாவி தண்ணீரை

வரவேற்றனர்.

இன்று சூரிய பிரபையில்

6 பெருமாள் சுவாமி தரிசனம்

ரத சப்தமி விழாவை முன்னிட்டு சேலம் அம்மாபேட்டை சவுந்தரராஜர், பட்டைக்கோவில் வரதராஜர், கிருஷ்ணன், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர், அசோக் நகர் வெங்கடேச பெருமாள், கிருஷ்ணா நகர் சீதா ராமச்சந்திர மூர்த்தி ஆகிய கோவில்களில் உள்ள, 6 பெருமாள் சுவாமிகள், இன்று காலை, 11:00 மணிக்கு, பட்டைக்கோவில் அருகே சிங்கமெத்தை சவுராஷ்டிரா மண்டபத்தில் சூரிய பிரபை வாகனத்தில் காட்சியளிப்பர்.

மதியம் ஒரே நேரத்தில் அனைத்து பெருமாள் சுவாமிகளுக்கும் மண்டகப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பின் முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா சென்று, சுவாமிகள், அந்தந்த கோவில்களுக்கு திரும்புவர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள், சேலம் சவுராஷ்டிரா வித்யா சபை கல்யாண மண்டப நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பைக்கில் உரசுவதுபோல் வந்து

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பள்ளிப்பாளையம் அருகே தாஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன். கிழக்கு தொட்டிப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக உள்ளார். அவரது மனைவி செல்வி. இவர்கள், சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு சாலையில் உள்ள மண்டபத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டு, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

சங்ககிரி - பள்ளிப்பாளையம் சாலையில் தாமஸ் காலனி அருகே வந்தபோது, 'பல்சர்' பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், முருகேசன் மீது மோதுவது போல் சென்றனர். அதிர்ச்சி அடைந்த முருகேசன் பைக்கை நிறுத்தினார். அப்போது, ஹெல்மெட் அணிந்திருந்த, 2 பேரும், செல்வி அணிந்திருந்த, 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து வேகமாக சென்று தப்பித்தனர். முருகேசன் பின்தொடர்ந்தும் பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து செல்வி புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

'பேலர்' இயந்திரத்தில்

டிரைவரின் கை சிக்கியது

ஆத்துார் அருகே பழனியாபுரி, சுந்தரபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் செங்கதிர், 20. டிரைவரான இவர் நேற்று மதியம், 1:00 மணிக்கு அப்பமசமுத்திரத்தில் நெல் அறுவடை செய்த வயலில் வைக்கோல் கட்டும், 'பேலர்' இயந்திரத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது வைக்கோல் சிக்கிக்கொள்ள, சரிசெய்ய முயன்றார். ஆனால், 'பேலர்' இயந்திரத்தில் அவரது இடதுகை சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட தொழிலாளர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

குடிநீர் திறந்து விடும்பணியாளருக்கு எச்சரிக்கை

பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 10,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அங்கு ஏரியில் உள்ள திறந்தவெளி கிணற்று நீரும், காவிரி குடிநீரும், வார்டு வாரியாக வினியோகிக்கப்படுகிறது. சில நேரங்களில் காவிரி குடிநீர், உப்பு நீர் இரண்டையும் கலந்து வினியோகித்தனர். இதனால் சளி, தொண்டை கரகரப்பு போன்ற ஒவ்வாமை ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் எழுந்ததால் நேற்று, 'இரு தண்ணீரையும் ஒரே நேரத்தில் வினியோகிக்க கூடாது; காவிரி குடிநீரை தனியே வினியோகிக்க வேண்டும்' என, செயல் அலுவலர் சிவராஜி, குடிநீர் திறந்து விடும் பணியாளர்களை எச்சரித்தார்.

2 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்சேலம் டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம், சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த சசிகலா, டவுனுக்கு இடமாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை, கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்துள்ளார்.

மக்கள் பயன்பாட்டுக்கு 3 கழிப்பிடங்கள் திறப்பு

தாரமங்கலம் நகராட்சி, 2வது வார்டு நரிக்குறவர் காலனி, 3வது வார்டு பாரக்கல்லுார், 13வது வார்டு நல்லகிணறு பகுதிகளில் கழிப்பிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு துாய்மை இந்தியா திட்டத்தில், 20.10 லட்சம் வீதம், 60.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கழிப்பிடங்கள் கட்டும் பணி தொடங்கி முடிந்தது. அந்த கழிப்பிடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு, நகராட்சி தலைவர் குணசேகரன் நேற்று தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தனம், கமிஷனர் சேம் கிங்ஸ்டன், கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

வாகனம் மோதியதில்முதியவர் மூளைச்சாவு

சேலம், சீலநாயக்கன்பட்டி, சின்னப்பட்சிக்காட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 57. இவர் கடந்த, 11 இரவு, 7:00 மணிக்கு, அரியானுார் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

நவக்கிரக சிலைகளுக்கு

கும்பாபிேஷகம்

ஆத்துார், விநாயகபுரம், வசிஷ்ட நதி தென்புறத்தில் உள்ள ஆத்துாரம்மன் கோவிலில் நவக்கிரக சிலைகள் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று அந்த சிலைகளின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

பயணியர் நிழற்கூடம் திறந்து வைத்த எம்.பி.,

தி.மு.க.,வை சேர்ந்த, தர்மபுரி எம்.பி., செந்தில்குமார். அவரது தொகுதி மேம்பாட்டு நிதி, 16 லட்சம் ரூபாய் செலவில், நங்கவள்ளி, கோனுார் ஊராட்சி, சமத்துவபுரத்தில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை நேற்று, எம்.பி., செந்தில்குமார் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரசு பஸ் மோதி

தொழிலாளி பலி

பெத்தநாயக்கன்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் சின்னதம்பி, 47. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஆத்துாரில் இருந்து பெத்தநாயக்கன்பாளையம் நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

செல்லியம்பாளையம் சர்வீஸ் சாலையில் சென்றபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற அரசு பஸ், சின்னதம்பி மீது மோதியது. இதில் அவர், பஸ்சின் முன்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவி மாயம்

கணவர் புகார்

பனமரத்துப்பட்டி, குள்ளப்பநாயக்கனுாரை சேர்ந்த மாற்றுத்திறனாளி கந்தசாமி, 40. கட்டட கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா, 34. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த, 27ல் வீட்டில் இருந்து வெளியேறிய பிரியா வீடு திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தரும்படி அவரது தாய் செல்வமணி நேற்று முன்தினம் அளித்த புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார்

விசாரிக்கின்றனர்.

சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை

ஜூலை 12ல் நடத்த முடிவு

சங்ககிரி மலை அடிவாரத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, 1994ல் நடந்தது. 2010ல் கும்பாபிஷேகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்து, ராஜகோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டது. சோமேஸ்வரர் சுவாமியை சுற்றியுள்ள அனைத்து சுவாமிகளின் மண்டபமும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகம் நடந்து, 30 ஆண்டு நிறைவடைந்ததால், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் இணைந்து, ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினர். தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்து பேசினார். அதில் ஜூலை, 12ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

செயல் அலுவலர் சங்கரன், தி.மு.க.,வை சேர்ந்த நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர் ராஜேஷ், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன முன்னாள் மாநிலத்தலைவர் குமாரசாமி, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் சண்முகம், தொழிலதிபர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

மர்ம விலங்கால் பீதியில் மக்கள்

கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி, கோம்பைக்காடு கிராமம், பாலமலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு, 50க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

ஆனால், ஒரு மாதத்தில் அப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட ஆடுகள், 6 நாய்களை மர்மவிலங்கு சாகடித்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம விலங்கு, அப்பகுதியை சேர்ந்த விவசாயி செல்லப்பன் வளர்த்து வந்த நாயை பிடித்துச்சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மலை அடிவாரத்தில் சுற்றித்திரியும் மர்ம விலங்கு சிறுத்தை என, கிராம மக்கள் கூறுகின்றனர். அதை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து வருவாய்த்துறையினர், நேற்று அப்பகுதியில் பார்வையிட்டனர். ஒரு வாரத்துக்கு முன், வனத்துறையினர், மர்ம விலங்கை காண்காணிக்க, இரு இடங்களில் கேமரா பொருத்தினர். அதில் மர்மவிலங்கு நடமாட்டம் பதிவாகவில்லை.

வரி வசூல் மைய 'சர்வர்' பழுது

மக்கள் காத்திருந்து அவதி

ஆத்துார் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. அங்கு குடிநீர், சொத்து, தொழில், கடை வாடகை, காலிமனை வரி உள்ளிட்டவற்றில், 59,313 பேரிடம், ஆண்டுக்கு, 13.62 கோடி ரூபாய்

வசூலாகிறது.

இந்த வரிகளை கட்டுவதற்கு, நகராட்சி அலுவலகத்தில் கணினி வரி வசூல் மையம் உள்ளது. அங்கு தினமும், 150 முதல் 200 பேர் பல்வேறு வரிகளை செலுத்தி வருகின்றனர்.

கடந்த, 12 முதல், இணைய சேவை, 'சர்வர்', அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் வரிகளை கட்ட வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. இதே அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திலும், 'சர்வர்' பழுது காரணமாக ஆதார் திருத்தம், புதுப்பித்தல் போன்ற பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'சென்னையில் உள்ள தலைமை கணினி சேவை மையத்தில் புது தொழில்நுட்ப மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் சில மணி நேரம் மட்டும், 'சர்வர்' வேலை செய்கிறது. ஓரிரு நாளில், 'சர்வர்' சரியான முறையில் செயல்படும் என உறுதி அளித்துள்ளனர்' என்றனர்.

கால்நடைக்கு தடுப்பூசி

போட்டுக்கொள்ள அழைப்பு

கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:

கன்று வீச்சு நோய், பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படுகிறது. இந்நோய் ஆடு, மாடு போன்ற அசையூட்டும் பிராணிகள், நாய், குதிரைகளையும் தாக்கும். இந்நோய்க்கு ஆளான கால்நடைகளுக்கு இறந்த நிலையில் கன்று, குட்டி பிறக்கும். நலிந்த கன்று, நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால் உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகளை

ஏற்படுத்தும்.

இந்நோய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது. கால்நடைகளோடு நெருங்கி பழகும் விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள், இறைச்சி கடைகளில் பணிபுரிவோர், நோயுற்ற மாடுகளின் பால், இறைச்சியை பயன்படுத்துவோரை தாக்கும் அபாயம் உள்ளது.

இந்நோயை தடுப்பதற்கு சேலம் மாவட்டத்தில் மார்ச், 15 வரை, கிடாரி கன்றுகளுக்கு, 21,280 டோஸ் தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளன. அதனால் கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி, கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

394 மாணவ, மாணவியர்களுக்கு

ரூ.14 கோடி கல்வி கடன் வழங்கல்

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில், 'கல்வி கடன் மேளா' நேற்று நடந்தது. அதை தொடங்கி வைத்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:

இந்த முகாமில் ஏற்கனவே கல்வி கடன் வேண்டி வித்யாலட்சுமி, ஜன்சமர்த் இணையதளங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமின்றி புதிதாக கடன் கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், 2023 டிசம்பர் வரை, 2,200 மாணவ, மாணவிகளுக்கு, 70 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள, 44 வங்கிகள், மாணவ, மாணவியர் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்து, இதுவரை, 394 பேருக்கு, 14.47 கோடி ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்வி கடன் எளிதாக பெற்று வழங்குவதற்கு இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். இதை பயன்படுத்தி மாணவ, மாணவியர், வாழ்வில் மேலும் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us