ADDED : பிப் 18, 2024 10:04 AM
மாணவியிடம் அத்துமீறல்
ஆசிரியர் போக்சோவில் கைது
மேச்சேரி, புக்கம்பட்டி ஊராட்சி பூசாரிவளவு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜியா உல்-ஹக், 44; ஓமலுாரில் மனைவி, மகன், மகளுடன் வசிக்கிறார்.
பள்ளியில் ஒரு மாணவியிடம், மொபைல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல்
ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகார்படி மேட்டூர் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து 'போக்சோ' சட்டத்தில், அவரை நேற்று கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு ஏற்பாடு
ஆர்.டி.ஓ., அறிவுரை
கெங்கவல்லி அருகே உலிபுரத்தில், வரும், 23ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. 25ல் தம்மம்பட்டியில் நடத்த ஏற்பாடு நடக்கிறது.
உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார். அப்போது குடிநீர், மருத்துவம்
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். கெங்கவல்லி தாசில்தார்
வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த்துறை
அலுவலர்கள், போலீசார் உடனிருந்தனர்.
சாராயம் கடத்திய2 பேர் கைதுதலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி எலந்தவாரி மலை கிராமத்தில் ஆத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., சென்னகேசவன் தலைமையில் போலீசார், நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, 2 பைக்குகளில் சாராயம் கடத்தி வந்தவர்களை பிடித்தனர். அவர்களிடம், 12 லாரி டியூப்களில் இருந்த, 600 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய, 'ஸ்பிளண்டர்' பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலையில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும், கள்ளக்குறிச்சி, தொரடிப்பட்டை சேர்ந்த வெங்கடேசன், 24, தீர்த்தகிரி, 23, என்பதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வெட்டப்படும் மரங்கள்கமிஷனர் விசாரணை
இடைப்பாடி அருகே வெள்ளாண்டிவலசில், நகராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. அங்கு, 200க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அதில் சில மரங்கள் காய்ந்து பட்டுப்போய் உள்ளன.
நேற்று, ஏராளமான மரங்களை சிலர் வெட்டியுள்ளனர். இதையறிந்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி கவுன்சிலர் ரவி உள்பட பலர், மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தி, நகராட்சி கமிஷனர் முஸ்தபாவுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரித்த பின் கமிஷனர் முஸ்தபா கூறுகையில், ''வருவாய்த்துறை அனுமதி, மதிப்பீடு பெற்று, வீரவேல் என்பவருக்கு, 60 மரங்களை வெட்ட ஏலம் விடப்பட்டுள்ளது. அவர், கூடுதலாக மரங்களை வெட்டினாரா என விசாரிக்கப்படும்,'' என்றார்.
தாதகாப்பட்டியில் இன்றுதி.மு.க., பொதுக்கூட்டம்
தாதகாப்பட்டியில் இன்று, தி.மு.க., பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் லோக்சபா தொகுதியில், பிப்., 18(இன்று) மாலை, 5:00 மணிக்கு தாதகாப்பட்டி கேட் மைதானத்தில், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' தலைப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
மாவட்ட செயலர்களான சிவலிங்கம், செல்வகணபதி முன்னிலை வகிக்கின்றனர். எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகிறார். இதில் கட்சியினர் திரளானோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளி கட்டடங்கள் திறப்பு
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் ஒண்டியூர் தொடக்கப்பள்ளி, காட்டூர், தம்மநாயக்கன்பட்டி, ஜருகுமலை நடுநிலைப்பள்ளிகளுக்கு, புது கட்டடங்கள் கட்டப்பட்டன.
அந்த கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று திறந்து வைத்தார்.ஆசிரியர்கள், பள்ளிகளில் குத்து விளக்கேற்றினர். தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், 3.42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தை, முதல்வர் திறந்து வைத்தார்.
மாட்டு தீவனம் எரிந்து சேதம்
கொளத்துார், கருங்கல்லுார், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னதம்பி. இவர் மாடுகளின் தீவனத்துக்கு, 50,000 ரூபாய் மதிப்பில், 200 சோளத்தட்டு கட்டுகளை வாங்கி இருப்பு வைத்திருந்தார். நேற்று மதியம், சோளத்தட்டுகள் தீப்பற்றி எரிந்தன. மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், தீயை அணைத்தனர்.
எனினும் பெரும்பாலான கட்டுகள் கருகி சேதமாகின. கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆடுகள் வரத்து சற்று உயர்வு
கொங்கணாபுரம் டவுன் பஞ்சாயத்து வாரச்சந்தைக்கு நேற்று ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், 4,030 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 6,600 முதல், 6,800 ரூபாய்; செம்மறியாடு, 6,450 முதல், 6,600 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.75 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம், 210 ஆடுகள் அதிகமாக கொண்டுவரப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நடந்தது. அதில், 100 கிலோ மூட்டை, பி.டி., ரகம், 6,600 முதல், 7,469 ரூபாய்; டி.சி.எச்., ரகம் மூட்டை, 9,650 முதல், 12,169 ரூபாய்; கொட்டு ரகம், 4,350 முதல், 5,190 ரூபாய் வரை விலைபோனது. 2,350 மூட்டைகள் மூலம், 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கடந்த வாரத்தை விட, இந்த வாரம், டி.சி.எச்., ரகம் மூட்டைக்கு, 100 ரூபாய் விலை அதிகரித்த நிலையில், கொட்டு ரகம் மூட்டைக்கு, 250 ரூபாய் குறைந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
துாய்மை பணியாளர் பற்றாக்குறை
குப்பை அகற்றுவதில் சிக்கல்
பனமரத்துப்பட்டி ஒன்றிய கட்டுப்பாட்டில் அமானி கொண்டலாம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. அங்கு, 2000ம் ஆண்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, 8 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 15 வார்டுகளில், 6,400 வீடுகளில், 30,000 பேர் வசிக்கின்றனர்.
சிறு, குறு, தொழிற்சாலை, லாரி பட்டறைகள் ஏராளமாக உள்ளன. கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ்கள் உள்ளன. அதனால் தினமும், 2 டன் குப்பை, பொது இடங்களில் குவிகிறது. இரு துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. 6 பணியாளர்களால், 15 வார்டுகளில் சாக்கடை சுத்தப்படுத்தல், குப்பை அகற்றல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், திடக்கழிவு மேலாண் திட்டத்தை செயல்படுத்தல் போன்ற துாய்மை பணிகளை செய்ய முடியவில்லை.
ஆங்காங்கே சாலையில் ஓடும் கழிவு நீர், சிதறி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் காலி பணியிடங்களை நிரப்பி, மக்கள் தொகைக்கு ஏற்ப, கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் கும்பாபிேஷகம்
அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்தல்
அகில பாரத இந்து மகா சபாவின் ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில் சேலம், தாதகாப்பட்டியில் ஆலய பண்பாடு, பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
அதில் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன் தலைமை வகித்தார். செயலர் மனோகரன், மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்ச பூத ஸ்தலங்களான பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர், ஆத்துார் காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், கூகையூர் சொர்ணபுரீசுவரர் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் பங்கேற்ற பின், தேசிய துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறுகையில், ''லோக்சபா தேர்தல் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். காவி புரட்சியை ஏற்படுத்தும்.
ராமர் கோவிலை மீட்டது போல் காசி, மதுராவை மத்திய அரசு மீட்க வேண்டும். தமிழகத்தில் கோவில்களில் வரும் வருவாயை அரசு எடுத்துக்கொள்கிறது.
இந்த வருவாய் மூலம், கோவில்கள் புனரமைக்கப்பட வேண்டும்,'' என்றார்.
சேகோ ஆலைக்கு 'சீல்'
உரிமையாளருக்கு 'நோட்டீஸ்'
ஆத்துார், தெற்கு காடு பைத்துார் சாலையில் அழகேசன் மனைவி சாந்திக்கு சொந்தமான சேகோ ஆலை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் சேலம் சேகாசர்வ் மேலாண் இயக்குனர் லலித், சேலம் உணவு பாதுப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது உணவு பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடாத, சோடியம் ைஹப்போ குளோரைடு, 33 கேன்களில் இருந்தது. அவை ஜவ்வரிசி தயாரிப்புக்கு பயன்படுத்தியது தெரிந்தது. தொடர்ந்து, ஜவ்வரிசி - 16,200 கிலோ, ஸ்டார்ச் மில்க் - 10,800 கிலோ, ஈர ஸ்டார்ச் மாவு - 5,402 கிலோ, சோடியம் ைஹப்போ குளோரைடு - 1,650 லிட்டர் என, 15.31 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அப்பொருட்களில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து அதன் பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும் சேகோ ஆலைக்கு, உணவு பாதுகாப்பு துறை வழங்கிய உரிமத்தை தற்காலிக ரத்து செய்து, ஆலைக்கு நேற்று, 'சீல்' வைத்தனர். ஆலை உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
மகளை பார்க்க சென்றபோது
விபத்தில் தொழிலாளி பலி
சேலம் மாவட்டம் வேம்படிதாளம், கருங்கல்காட்டு வளவை சேர்ந்தவர் சித்தன், 52. இவரது மனைவி பெருமாயி, 47. வீட்டில் தறி நெய்து வரும் சித்தனுக்கு, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
மகளை, ஆட்டையாம்பட்டி அருகே சின்ன ஆண்டிப்பட்டியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகளை பார்க்க, நேற்று காலை, 11:00 மணிக்கு, 'டி.வி.எஸ்., 50' மொபட்டில் புறப்பட்டார்.
சேலம் - கோவை 4 வழிச்சாலை, ராக்கிப்பட்டி பிரிவில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, சங்ககிரி அருகே தேவூரை சேர்ந்த செந்தில், 46, என்பவர், காகாபாளையத்தில் இருந்து சேலம் நோக்கி ஓட்டி வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது.
அதில் படுகாயம் அடைந்த சித்தனை, மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் அவர் இறந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
உழவர் சந்தையில் விதிமீறல்
3 விவசாயிகள் 'சஸ்பெண்ட்'
சேலம், அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் நேற்றைய விலை பட்டியலில் தக்காளி கிலோ, 12 முதல், 14 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த குளறுபடி குறித்து நுகர்வோர்கள், கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து வேளாண் வணிக துணை இயக்குனர் பாலசுப்ரமணியம், உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் விலைக்கு தக்காளி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிக விலைக்கு தக்காளியை விற்ற விவசாயிகளான, சின்னபொண்ணு, கமலா, 15 நாள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்படி இருவரும், மார்ச், 3 வரை, உழவர் சந்தையில் காய்கறி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில விவசாயிகள், தக்காளியை கொண்டு வந்து விற்காமல் பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியது தெரிந்தது. இதனால் தக்காளி கொண்டு வந்த, 6 விவசாயிகள் நிலத்தில் ஆய்வு நடந்தது. அதில் சாமியப்பன் மட்டும், அவரது நிலத்தில் அறுவடை செய்த தக்காளியை கொண்டு வந்ததும், மற்றவர்கள் வெளிச்சந்தையில் வாங்கி விற்க முயன்றதும் தெரிந்தது. இந்த விதிமீறலால், பூலாவரியை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் மன்ற உறுப்பினர் அமராவதி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில், ''விதிமீறி வெளிச்சந்தையில் வாங்கி வந்து தக்காளி விற்ற மற்ற விவசாயிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
ஏரியில் சீமை கருவேல மரங்களால் ஆபத்து
சேலம், இரும்பாலை அருகே, வீரபாண்டி ஒன்றியம் கீரைபாப்பம்பாடி ஊராட்சி உள்ளது.
அதன் மையத்தில், 30 ஏக்கரில் ஏரி உள்ளது. அந்த ஏரியை, 2017ல் ஊரக வளர்ச்சித்துறையின், 'தாய்' திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரி ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி, தடுப்பணை கட்டப்பட்டது. அதற்கு பின் முறையான பராமரிப்பின்றி தற்போது ஏரி முழுதும் தண்ணீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
வழக்கமாக செப்டம்பர், அக்டோபரில் பெய்யும் மழைநீரால் ஏரி நிரம்பியிருக்கும். தற்போது கோடைகாலம் தொடங்கும் முன், ஏரியில் தண்ணீரின்றி உள்ளது. குறைந்தளவே தேங்கியுள்ள நீரையும் காய்ந்து கிடக்கும் சீமை கருவேல மரங்கள் உறிஞ்சி எடுத்து வருகின்றன.
இதனால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சீமை கருவேல மரங்களை முழுதுமாக அகற்றி, தண்ணீர் வரும் வழிகளை துார்வாரி சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.