ADDED : பிப் 19, 2024 10:12 AM
விபத்தில் வாலிபர் பலி
வேன் டிரைவர் சிக்கினார்
தர்மபுரி மாவட்டம் மித்தனஹள்ளியை சேர்ந்தவர் சரவணன், 40. கட்டட தொழிலில், 'டைல்ஸ்' மேஸ்திரியாக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி சங்கீதா, 32, மட்டுமின்றி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று சங்ககிரி வந்த சரவணன், 'ஆக்டிவா' மொபட்டில் சேலம் நோக்கி புறப்பட்டார். மதியம், 12:15 மணிக்கு, சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே வந்தபோது, மொபட் பின்புறம், ஆம்னி வேன் மோதியது. அதில் சரவணன் சம்பவ இடத்தில் பலியானார். சங்ககிரி போலீசார் விசாரித்ததில், வேனை ஓட்டிவந்தது, ஆத்துார் அருகே முல்லைவாடியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார், 32, என தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.
அரசு பஸ் டிரைவரை
தாக்கியவருக்கு 'காப்பு'
சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வாழப்பாடிக்கு, நேற்று முன்தினம் மதியம், 1:25 மணிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. தலைவாசல் அருகே புளியங்குறிச்சியை சேர்ந்த பாஸ்கரன், 48, ஓட்டினார். சேலம், சின்னக்கடை வீதியில் சென்றபோது, சாலை நடுவே சரக்கு ஆட்டோ நின்றிருந்தது. அதன் டிரைவரிடம் ஆட்டோவை ஓரங்கட்ட, பாஸ்கரன் அறிவுறுத்தினார். அதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த சரக்கு ஆட்டோ டிரைவர், பாஸ்கரனை, ஒரு பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில், காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, டவுன் போலீசார் விசாரித்து சரக்கு ஆட்டோ டிரைவரான, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கார்கூடல்பட்டியை சே்ர்ந்த மணிமாறன், 42, என்பவரை கைது செய்தனர்.
கொட்டகையில் தீ
பசு மாடு சாவு
ஆத்துார், உப்பு ஓடையை சேர்ந்தவர் சேகர், 40. இவர் விவசாய தோட்டத்தில் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்க்கிறார். நேற்று மாலை, 5:00 மணிக்கு தீவனத்துக்கு வைத்திருந்த வைக்கோலில் தீப்பற்றி எரிந்தது. அதில் ஒரு பசு மாடு, புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்தது. கன்றுக்குட்டி படுகாயம் அடைந்த நிலையில் உயிர் தப்பியது. மாலை, 5:20 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாயமான மாணவர்கள் கொல்லிமலையில் மீட்பு
சேலம், சின்னக்கொல்லப்பட்டியை சேர்ந்த, 14 வயதுடைய இரு சிறுவர்கள், 8ம் வகுப்பு படிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு சரியாக வராததால், பெற்றோருடன் பள்ளிக்கு வரும்படி, ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த, 16 காலை, பள்ளிக்கு புறப்பட்ட இருவரும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் அளித்த புகார்படி கன்னங்குறிச்சி போலீசார் தேடினர். அவர்கள், கொல்லிமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்ற போலீசார், மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அரசு பணியாளர் சங்கம்
சாலை மறியல்
சேலம் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று, சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாநில தலைவர் சுகமதி தலைமை வகித்தார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; அனைத்து மருத்துவ
மனைகளில் அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்குதல்; ரேஷன் கடைகளுக்கென தனித்துறையை உருவாக்குதல்; ரேஷன் பொருட்களை பொட்டலமாக வழங்குதல்; பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில துணைத்தலைவர்கள் கணேசன், முருகேசன், மாவட்ட தலைவர் நாகேந்திரன், பொருளாளர் ராஜி உள்பட பலர் பங்கேற்றனர். போலீசார், மறியலில் ஈடுபட்ட, 45 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
'எம்.எல்.ஏ., நிதியை
ஒதுக்காத தி.மு.க., அரசு'
பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றியம் அம்மாபாளையத்தில், அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது. வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் ஜெகநாதன் வரவேற்றார். சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலர் தமிழ்மணி பேசினார்.
தொடர்ந்து சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: நம், 10 ஆண்டு ஆட்சியில் வீரபாண்டி தொகுதியில், 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, 17,000 பேருக்கு இலவச வீடுகள் கொடுத்தோம். ஆனால், 3 ஆண்டுகளாகியும் தி.மு.க., அரசு, ஒரு இலவச வீடு கூட ஒதுக்கவில்லை. சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், 3 கோடி ரூபாய்க்கு, நம் எம்.எல்.ஏ., பணிகளை பிரித்து கொடுத்துள்ளார். இதுவரை அப்
பணிக்கு, தி.மு.க., அரசு நிதி ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், சேலம், அம்மாபேட்டையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சேது செல்வம் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் மாயவன்
முன்னிலை வகித்தார்.
அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, அதற்கான ஊதியத்தை பெறும் உரிமையை வழங்குதல்; 2004 முதல், 2006 வரை, தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை, நியமன நாளில் இருந்து பணி வரன்முறை செய்து ஆணை வழங்குதல்; திருவண்ணாமலையில் மார்ச், 10ல் மகளிர் மாநாடு நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் பிரேம்குமார், மாநில பொதுச்செயலர் ஜெயக்குமார், மாநில பொருளாளர் விஜயசாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.
விலகிய பட்டை: விபத்துக்கு 'வழி'
சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில் சீரகாபாடியில் ஒருவழிப்பாதை மேம்பாலம் உள்ளது. சேலத்தில் இருந்து காகாபாளையம் செல்லும் வாகனங்களும், அந்த பாலம் வழியே செல்கின்றன.
அதன் நடுவே, 3 இடங்களில் இரும்பு பட்டைகளால் பாலத்தை இணைத்துள்ளனர். ஆனால் துருப்பிடித்து பட்டைகள் உடைந்து விலகியுள்ளன. இது இருசக்கர வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்க்கிறது. கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால் பட்டைகளில் இடைவெளி அதிகரித்து வருவது விபத்துக்கு வழிவகுக்கிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இரும்பு பட்டைகளை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிணற்றில் விழுந்த
புள்ளி மான் மீட்பு
ஆத்துார் அருகே பைத்துார் வனப்பகுதி, காப்புக்காட்டில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. அங்கிருந்து நேற்று மதியம், 3:00 மணிக்கு தண்ணீர், இரை தேடி வந்த ஆண் புள்ளி மான், செல்வராஜ் என்பவரது, 70 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 3:20 மணிக்கு வந்து, மக்கள் உதவியுடன், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், மானை உயிருடன் மீட்டு தம்மம்பட்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

