/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதலீடு வாங்கியதற்கு ஆவணம் இல்லை; அறக்கட்டளை நிர்வாகிகள் 4 பேர் கைது
/
முதலீடு வாங்கியதற்கு ஆவணம் இல்லை; அறக்கட்டளை நிர்வாகிகள் 4 பேர் கைது
முதலீடு வாங்கியதற்கு ஆவணம் இல்லை; அறக்கட்டளை நிர்வாகிகள் 4 பேர் கைது
முதலீடு வாங்கியதற்கு ஆவணம் இல்லை; அறக்கட்டளை நிர்வாகிகள் 4 பேர் கைது
ADDED : ஜன 24, 2025 04:02 AM
சேலம்: சேலத்தில், முதலீடு வாங்கியது உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணம் இல்லாததால், அறக்கட்டளை நிர்வாகிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவர்களிடம் விசாரிக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேலம், அம்மாபேட்டையில் ஒரு மண்டபத்தில், அன்னை தெரசா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் இரு ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு கூடை பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழை மக்கள் பயன்பெற, குறைந்த விலையில் உணவகமும் செயல்படுகிறது. இந்நிலையில் அறக்கட்டளையில், 5,000 ரூபாய் முதலீடு செய்தால், 11 மாதங்கள் வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்; 50,000 முதலீடு செய்தால், 7 மாதங்களுக்கு, 15,000 ரூபாய் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.
இதை அறிந்து, சேலம் பெருளாதார குற்றப்பிரிவு போலீசார், சிறப்பு எஸ்.ஐ., ஒருவரை அனுப்ப, அவரும் முதலீட்டாளராக சேர்ந்தார். சில மாதங்களாக அங்கு நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையை, அவர் தயாரித்து சமர்ப்பித்தார். நேற்று அதிரடி சலுகையாக, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 7வது மாதத்தில், 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தொண்டு நிறுவனம் அறிவித்தது. இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மண்டபத்தில் நுழைந்து விசாரித்தனர்.அங்கிருந்த மக்கள், 'முதலீட்டாளர்களுக்கு தவறாமல் தவணை தொகை வழங்கப்படுகிறது. அதனால் விசாரிக்க வேண்டாம்' என கூறி வாக்குவாதம் செய்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்களை கட்டுப்படுத்த மாநகர போலீசார், 100க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அம்மாபேட்டை பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போலீசார், மக்களை மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர்.
அறக்கட்டளை நிர்வாகிகளான, வேலுாரை சேர்ந்த விஜயபானு, அவரது உதவியாளர் ஜெயப்பிரதா, சேலம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மேலாளர் பாஸ்கரிடம் விசாரித்தனர். அதில் மக்களிடம் வசூலித்த பணத்துக்கு முறையான உரிமம், ரசீது, வருமான வழி வகை ஆகியவற்றுக்கு எந்த ஆவணங்களும் இல்லாதது தெரிந்தது. இதனால், 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 2 ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். போலீசார் கூறியதாவது:முழு விசாரணைக்கு பின் தான், எவ்வளவு தொகை, எத்தனை பேரிடம் முதலீடு பெறப்பட்டது, தொண்டு நிறுவன நோக்கம் என்ன உள்ளிட்ட விபரங்கள் தெரிய வரும். கைது செய்யப்பட்ட விஜயபானு மீது, ஏற்கனவே வேலுாரில் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

