/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விடுபட்ட நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்ய சிறப்பு திட்டத்தில் வாய்ப்பு
/
விடுபட்ட நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்ய சிறப்பு திட்டத்தில் வாய்ப்பு
விடுபட்ட நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்ய சிறப்பு திட்டத்தில் வாய்ப்பு
விடுபட்ட நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்ய சிறப்பு திட்டத்தில் வாய்ப்பு
ADDED : ஜூலை 17, 2025 01:49 AM
சேலம், விடுபட்ட நிறுவனங்களுக்கு, இ.எஸ்.ஐ., பலன் பெற பதிவு செய்யும் வகையில், எஸ்.பி.ஆர்.இ.இ., திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் இ.எஸ்.ஐ., மண்டல சார் அலுவலக இயக்குனர் சிவராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில், 196வது இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் கூட்டம் சிம்லாவில் நடந்தது. இதில், எஸ்.பி.ஆர்.இ.இ., திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்ட இத்திட்டம், ஜூலை 1 முதல், டிச., 31 வரை அமலில் இருக்கும்.
ஒரு நிறுவனத்தில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் பட்சத்தில், அந்த நிறுவனம் இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு இதுவரை இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்யாத நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள், தாங்களாக முன் வந்து பதிவு செய்து கொள்ள, இச்சிறப்பு திட்டம் வழிவகை செய்கிறது.
நிறுவனங்கள் தங்கள் தொழிலாளிகளையும், ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களையும் இதன் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்யும் நிறுவனங்கள் மீது, பதிவு செய்யப்பட்ட தேதிக்கு முந்தைய காலத்துக்கு, எந்த ஒரு ஆய்வோ, நிலுவை தொகையோ வசூலிக்கப்பட மாட்டாது. பதிவு செய்யாமல் போனதற்காக, அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இது எஸ்.பி.ஆர்.இ.இ., திட்டத்தின் கீழ், ஒரு முறை மட்டும் அளிக்கப்படும் வாய்ப்பு.
நிறுவனங்கள் தங்களையும், தங்கள் தொழிலாளிகளையும், இ.எஸ்.ஐ., இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். உள்ளீடு செய்யும் தேதியிலிருந்து, இ.எஸ்.ஐ., திட்டம், அந்நிறுவனத்துக்கு பொருந்தும். இத்திட்டம், விடுபட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., திட்டத்துக்குள் கொண்டு வந்து, அனைவரையும் உள்ளடக்கிய சமூக பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, சேலம் மூன்று ரோடு, தீர்த்த மலை வணிக வளாகத்தில் உள்ள இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் சப் ரீஜனல் அலுவலகத்தை 0427-233 6941, 233 6942 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.