/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வழக்கு பதிய கோரி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பாலமலை மலைவாழ் மக்கள்
/
வழக்கு பதிய கோரி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பாலமலை மலைவாழ் மக்கள்
வழக்கு பதிய கோரி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பாலமலை மலைவாழ் மக்கள்
வழக்கு பதிய கோரி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பாலமலை மலைவாழ் மக்கள்
ADDED : ஜூலை 18, 2025 02:20 AM
மேட்டூர், நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, கொளத்துார் போலீஸ் ஸ்டேஷனை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், கொளத்துார், பாலமலை ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கெம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜித், 25, அவரது நண்பர்கள் ஜெயசூர்யா, சுரேஷ், பிரபு ஆகியோர் கடந்த, 12ம் தேதி மாலை, 3:00 மணிக்கு டூவீலர்களில் கண்ணாமூச்சியில் இருந்து பாலமலைக்கு சென்றனர்.
அப்போது, மலைப்பாதையில் வெளி மாநில நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணான தகவலை கூறிவிட்டு, அவரது டூவீலரில் கண்ணாமூச்சி கிராமத்துக்கு சென்றுள்ளார். சந்தேகமடைந்த நால்வரும், அவரை பின் தொடர்ந்து சென்று விசாரிக்க முயன்றனர்.அப்போது கண்ணாமூச்சியை சேர்ந்த சசி, தமிழ், ஆதி, யுவராஜ் ஆகிய நால்வரும் அஜித், அவரது நண்பர்களை சமுதாயத்தின் பெயரை சொல்லி திட்டி, மிரட்டியுள்ளனர். இது குறித்து கொளத்துார் போலீசில் அன்றைய தினமே அஜித் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்தனர்.
அதிருப்தியடைந்த பாலமலை பஞ்., தலைவர் தேவராஜ், முன்னாள் தலைவர் சரவணன் மற்றும் மலை கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் கொளத்துார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பின் ஜாதி பெயரை சொல்லி திட்டியவர்கள் மீது, உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். கொளத்துார் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், கண்ணாமூச்சியை சேர்ந்த சசி, தமிழ், ஆதி, யுவராஜ் ஆகிய நால்வர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து, மூன்று மணி நேரத்துக்கு மேல் முற்றுகையில் ஈடுபட்ட, பாலமலை கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.