/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புத்தக திருவிழாவுக்கு படையெடுத்த மக்கள்
/
புத்தக திருவிழாவுக்கு படையெடுத்த மக்கள்
ADDED : டிச 03, 2024 01:30 AM
புத்தக திருவிழாவுக்கு படையெடுத்த மக்கள்
சேலம், டிச. 2-------
சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவை, இரு நாட்களில், 8,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
சேலம் புத்தக திருவிழா, கடந்த, 29ல், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி திடலில் தொடங்கியது. அங்கு, நேற்று பெய்த மழையை பொருட்படுத்தாமலும், ஏராளமான வாசகர்கள் வந்திருந்தனர். அவர்கள் அரங்கை பார்வையிட்டு இலக்கியம், அரசியல், தத்துவம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு வகை புத்தகங்களை வாங்கிச்சென்றனர். குறிப்பாக, ஸ்டால் எண்: 216ல் அமைக்கப்பட்டுள்ள, 'காலைக்கதிர்' நாளிதழின், 'பட்டம்' அரங்கில், 'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' சார்பில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பலரும் வாங்கிச்சென்றனர்.
காலையில், 'சேலம் மாவட்டத்தின் கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள்' தலைப்பில் கருத்தரங்கம், 'கிரகம் முழுவதும் ஒரு பயணம்' என்ற குறும்படம், மதியம், பார்வையாளர்களை கவரும்படி, 'ஜெய் கோ' ஆவணப்படம் ஒளிபரப்பட்டது. தொடர்ந்து, 'சேலம் ஜமீன்தார்கள், வந்ததும் போனதும்' தலைப்பில், வரலாற்று எழுத்தாளர் அமுதன் கருத்தரங்கம், 'களிமண் மாடலிங்' தலைப்பில், மோகன்குமார் பயிலரங்கம் நடந்தது. இரவு, எழுத்தாளர் பவா செல்லதுரையின், 'என் அன்பான புத்தகமே' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் வாசகர்கள், கருத்துகளை கேட்டனர்.
இதுதொடர்பாக கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
புத்தக திருவிழாவுக்கு கடந்த, 29, 30ல், பள்ளி மாணவ, மாணவியர் - 658 பேர், கல்லுாரி மாணவ, மாணவியர் - 343 பேர், மக்கள் - 7,302 பேர் என, மொத்தம், 8,303 பேர் வந்தனர். அவர்கள் அரங்குகளை பார்வையிட்டு பயன் பெற்றுள்ளனர். தற்போது தொடர் மழை பெய்து வரும் சூழலில், புத்தகங்கள் நனையாமல் இருக்கும்படி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை, 'அறிவியலை பாடுவோம்' தலைப்பில் ஜெயமுருகன் கருத்தரங்கம், 'மந்திரமா - தந்திரமா?' தலைப்பில் மோகன்ராஜ் பயிலரங்கம் நடக்கிறது. மதியம், 12:00 முதல், 2:00 மணி வரை ஆவணப்படங்கள், 2:00 முதல், 3:30 மணி வரை, 'அன்றாட வாழ்வில் அறிவியல் தேவையா?' தலைப்பில் டாக்டர் சசிகுமார் கருத்தரங்கம் நடக்கிறது. மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை, எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், 'மாற்று எழுத்து' தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.
தொடர்ந்து டிச., 9 வரை, தினமும் காலை, 10:00 முதல், இரவு, 9:00 மணி வரை கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலைநிகழ்ச்சிகள், கருத்துரைகள் நடக்கின்றன. புத்தக திருவிழாவில் மாணவ, மாணவியர், இளைஞர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் வந்து பார்வையிட்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.