ADDED : ஏப் 22, 2025 01:10 AM
சேலம்:ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப, 6,000, 10,000, 15,000 ரூபாய் முறையே மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை
கோட்டையில் இன்று, தொடர் முற்றுகையில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அழைப்பு விடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தது.முற்றுகை போராட்டத்தை தடுக்கும் விதமாக, தமிழக அரசு திட்டமிட்டு, போலீசார் மூலம், சங்க
நிர்வாகிகள், உறுப்பினர்கள், நேற்றிரவு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். சேலம் ஜங்ஷனில், மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன், செயலர் குணசேகரன் உள்பட, 20 பேரை போலீசார் தடுத்து
நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். மேட்டூரில், 29 பேரை தடுத்து நிறுத்திய போலீசார், தாலுகா தலைவர் ஜானை வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
நங்கவள்ளியில் நாகேந்திரன், வீட்டுகாவலில் உள்ளார். இடைப்பாடியில் போலீஸ் எச்சரிக்கையை அடுத்து 8 பேர் வீடு திரும்பினர். அதேபோல, நாமக்கல்லில் தலைவர் நாகேஸ்வரி,
பரமத்திவேலுாரில் செயலர் குணசேகரன், செங்கல்பட்டில் தாட்சாயணி, வேலுாரில் ராஜேந்திரன், தஞ்சாவூரில் மாவட்ட தலைவர் கஸ்துாரி ஆகியோர் வீட்டு காவலிலஉள்ளனர். இதேபோல
தமிழகம் முழுவதும், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.