/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பில் தாமதம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் கண்டனம்
/
துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பில் தாமதம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் கண்டனம்
துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பில் தாமதம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் கண்டனம்
துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பில் தாமதம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் கண்டனம்
ADDED : ஜூன் 25, 2024 02:00 AM
ஓமலுார்: 'உடனே பெரியார் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பை வெளியிட வேண்டும். பழனிசாமி கமிட்டி அறிக்கையின்படி, துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரியார் பல்கலையில், தற்போது துணைவேந்தராக பணியாற்றி வரும் ஜெகநாதன், இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், ஆட்சிக்குழு பிரதிநிதியாக முன்னாள் பெரியார் பல்கலை துணைவேந்தர் தங்கராசு, ஆட்சிப்பேரவையின் பிரதிநிதியாக முன்னாள் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. குழு அமைப்பாளர் பெயர், உயர்கல்வி துறையிலிருந்து ஒரு மாதத்துக்கு முன்பே அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
ஆனால், இன்று வரை புதிய துணைவேந்தர் தேடுதல் தேர்வுக்குழுக்கான அறிவிப்பை, கவர்னர் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான குற்ற வழக்கு விசாரணை, நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான ஜாமின் ரத்து வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஜெகநாதன் பின்னணி இப்படி இருக்கையில், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கும் உள்நோக்கத்தில்தான், பழனிசாமி கமிட்டியின் விசாரணை அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காமலும், புதிய துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பை வெளியிடாமலும், கவர்னர் தாமதம் செய்து வருவதாக கருதுகிறோம்.
உடனே துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பை வெளியிட வேண்டும், பழனிசாமி கமிட்டி அறிக்கையின்படி, துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது எதிர்ப்பை மீறி பணி நீட்டிப்பு வழங்கினால், சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளோம். மேலும் கவர்னருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.