ADDED : ஏப் 13, 2024 11:05 AM
சேலம்: சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி அறிக்கை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின், தேர்தல் விளம்பர செலவினங்களை கண்காணித்து கணக்கிட்டு, செலவின பார்வையாளர்களுக்கு தினமும் அறிக்கை வழங்கப்படுகிறது. அதை, 24 மணி நேரமும் கண்காணிக்க, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.
இக்குழு தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான செய்திகளோ அல்லது அனுமதி பெறாத விளம்பரங்களோ வெளியிடப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கிறது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவரை சார்ந்தோர், தேர்தல் விளம்பரங்களை, நாளிதழ், தொலைக்காட்சி, எப்.எம்., ரேடியோக்களில் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.
நாளிதழில் வெளியிட விரும்புவோர், உரிய படிவத்துடன், விளம்பரம் வெளியிடுவதற்கு பதிவு செய்யப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சியினர், 3 நாட்களுக்கு முன்பாகவும், பதிவு செய்யப்படாத அரசியல் கட்சியினர், 7 நாட்களுக்கு முன்பாகவும் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு குழுவின் சான்றிதழ் பெற்ற விளம்பரங்கள் மட்டும் நாளிதழ் உள்ளிட்டவற்றில் வெளியிட வேண்டும்.

