பெருமாள் கோவில்களில் பூணுால் மாற்றிக்கொண்ட பக்தர்கள்
பெருமாள் கோவில்களில் பூணுால் மாற்றிக்கொண்ட பக்தர்கள்
ADDED : ஆக 28, 2026 06:15 AM

சேலம்:ஆவணி அவிட்டத்தில், வேதங்களை பாதுகாக்கும் வகையில் அந்தந்த வேதத்தை கடைப்பிடிப்பவர்கள், 'உபகர்மா' என்ற புது பூணுால் மாற்றிக்கொள்வர்.
அந்த நட்சத்திரமான நேற்று சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், மன்னார்பாளையம் பிரிவு லட்சுமி நரசிம்மர், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர், அசோக் நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள், கிருஷ்ணா நகர் சீதா ராமச்சந்திர மூர்த்தி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்கள், பஜனை மடங்களில், யஜூர் வேதத்தை கடைப்பிடிக்கும் ஆண்கள், கோவில்களுக்கு சென்று புது பூணுால்களை அணிந்து கொண்டனர்.
தொடர்ந்து முன்னோர்கள், வேத தெய்வங்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மந்திர உபதேசம் பெற்றுக்கொண்டனர்.மேலும் பெரும்பாலான கோவில்களில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல் வீடுகளில் 'ஒப்புட்டு' செய்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். 'ரிக்' வேதத்தை கடைப்பிடிப்பவர்கள் நேற்று முன்தினம் கொண்டாடினர். சாம வேதத்தை கடைப்பிடிப்பவர்கள் இன்று ஆவணி அவிட்டத்தை கொண்டாடுகின்றனர்.
