ADDED : செப் 17, 2024 07:33 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி ேஷக விழா கோலாகலமாக நடந்தது.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில், 800 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் கோவில் முன் அமைக்கப்பட்ட யாக சாலையில், முதல் கால யாக பூஜை, நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 9:30 மணிக்கு மேல் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை, கோவில் குருக்கள் கோபுரத்திற்கு எடுத்து சென்றனர். 9:45 மணிக்கு மேல் கோபுர கலசத்தில் புனித நீரை கோவில் குருக்கள் ஊற்றியபோது, கோவிந்தா கோஷம் முழங்க, பக்தர்கள் கோஷமிட்டு தரிசித்தனர்.
கலசத்திற்கு தீபாராதனை செய்து, பக்தர்கள் மீது புனித நீர், பூக்கள் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். செயல் அலுவலர் புனிதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.