/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுன் பஞ்., தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு
/
டவுன் பஞ்., தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு
டவுன் பஞ்., தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு
டவுன் பஞ்., தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு
ADDED : ஜூலை 17, 2025 01:49 AM
கெங்கவல்லி,தம்மம்பட்டி தி.மு.க., டவுன் பஞ்., தலைவி மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர செயல் அலுவலரிடம், தி.மு.க., - காங்., கவுன்சிலர்கள், 11 பேர் மனு வழங்கினர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த கவிதா, டவுன் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவரது கணவர் ராஜா, 4வது வார்டு, தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், தலைவி கவிதா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, நேற்று, தி.மு.க.,வை சேர்ந்த துணைத் தலைவர் சந்தியா, தி.மு.க., கவுன்சிலர்கள் நடராஜ், கலியவரதராஜ், நித்யா, வரதராஜன், ரேவதி, சமீனா, ரமேஷ், காவியா, காங்., கவுன்சிலர்கள் திருச்செல்வன், செல்வி ஆகிய 11 பேர், செயல் அலுவலர் ஜெசிமாபானுவிடம் புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:
தலைவி கவிதா, பதவியேற்றது முதல் அதிகார துஷ்பிரயோகம், காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களுக்கு சேவை செய்ய விடாமல் செய்து வருகிறார். டவுன் பஞ்சாயத்தில், பண இழப்பு ஏற்படுத்தியும், வணிக வளாக கடைகளை மறைமுக ஏலம் நடத்தி முறைகேடு செய்து வருகிறார். தெரு விளக்கு, குடிநீர் மின்சாதன பொருட்களின் கொள்முதலில் ஊழல் செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை.
புதிய புதிய தெருக்களையும், சாலைகளையும் அறிவித்து, டவுன் பஞ்சாயத்து பணத்திற்கும், தமிழக அரசு திட்ட நிதி ஒதுக்கீடு பணத்திற்கும், தலைவி முன் அனுமதி என்று தன் வார்டு பகுதிக்கும், தனது கணவர் வார்டு பகுதிக்கும் நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்து வருகின்றனர். தலைவி மீது, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு சட்டம்-1998 பிரிவு-51ன் கீழ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும், அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைவி கவிதா, அவரது கணவரும், கவுன்சிலருமான ராஜா ஆகியோர் கூறுகையில், 'அனைத்து வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐயப்பன் வீடு என்று குறிப்பிடுவதற்கு, ஐயப்பன் நகர் என்று எழுத்து பிழை இருந்தது. டவுன் பஞ்சாயத்தில் முறைகேடு எதுவும் இல்லை. நான் அதிகாரம் எதுவும் செய்யவில்லை. கவுன்சிலர் முன்னிலையில் தான், டெண்டர் விடப்பட்டுள்ளது. பொய்யான காரணங்கள் கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மனு வழங்கியுள்ளனர்' என்றனர்.