/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 2 மாணவருக்கு 'பீபா' செலுத்தி அறுவை சிகிச்சை; அரசு மருத்துவமனை சாதனை
/
பிளஸ் 2 மாணவருக்கு 'பீபா' செலுத்தி அறுவை சிகிச்சை; அரசு மருத்துவமனை சாதனை
பிளஸ் 2 மாணவருக்கு 'பீபா' செலுத்தி அறுவை சிகிச்சை; அரசு மருத்துவமனை சாதனை
பிளஸ் 2 மாணவருக்கு 'பீபா' செலுத்தி அறுவை சிகிச்சை; அரசு மருத்துவமனை சாதனை
ADDED : ஜன 08, 2025 07:02 AM
சேலம்: ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு, பீபா ஊசி மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை செய்து, சேலம் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலுார் அடுத்த பண்ணவாடி, மாரகவுண்டன்புதுாரை சேர்ந்த வெங்கடேஷ் - சத்யாவின் ஒரே மகன் சூர்யா, 17. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்ருகிறார். அவருக்கு, 4 வயது முதல், ஹீமோபிலியா எனும் அரிய வகை சார்ந்த, 'ரத்தம் உறையாத நோய்' உள்ளது.
இடது கண் வீங்கி, சிவப்பு நிறத்துடன் வலி அதிகமாக, கடந்த மாதம், சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, 3 வயதில் பட்டாசு வெடித்தபோது, இடது கண்ணில் காயம் உண்டாகி, பார்வை தெரியவில்லை என கூறினார். பரிசோதனையில், இடது கண் பார்வை முற்றிலும் இழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அறுவை சிகிச்சை மூலம், இடது கண்ணின் உட்புற திசுக்கள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து, டீன் தேவிமீனாள் கூறியதாவது: ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்வது சவாலான ஒன்று. அதே நேரம் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் கண்ணின் வெண்படலம் கிழிந்து அதன் வழியே உள்ளிருக்கும் அதிக ரத்த ஓட்டம் உள்ள தசைகளில் இருந்து கட்டுப்படுத்த முடியாத அளவில், ரத்தப்போக்கு உண்டாகி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
ரத்தப்போக்குடன் வெளியே வரும் தசைகளால், பார்வை உள்ள வலது கண்ணுக்கு கிருமி தொற்று உண்டாகி, அதன் பார்வையும் பறிபோகும் என்பதால் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின் ரத்த கசிவை அறவே தடுக்க, 'பீபா' எனும் ஊசி மருந்து அடுத்தடுத்து செலுத்தப்பட்டது. மொத்தம், 37.86 லட்சம் ரூபாய் மதிப்பில், பீபா ஊசி மருந்து செலுத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படாதபடி தடுக்கப்பட்டுள்ளது. இடது கண்ணின் உட்புற ரணம் ஆறியதும், செயற்கை கண் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பீபா ஊசி மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல்முறை. இவ்வாறு அவர் கூறினார்.
கண் சிகிச்சைத்துறை தலைவர் தேன்மொழி, ஹீமோபிலியா நோடல் அலுவலர் ரவீந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், பொது மருத்துவத்துறை தலைவர் சுரேஷ்கண்ணா, மயக்கவியல் நிபுணர் சசிரேகா, குழந்தைகள் நல மருத்துவர் சம்பத்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.