ADDED : ஏப் 24, 2025 01:44 AM
சேலம்:
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 28 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியா முழுதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகரில் மக்கள் கூடும் பகுதி, கோவில், மசூதி உள்ளிட்ட இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக சேலம், கோட்டை மைதானம், பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில், 'மெட்டல் டிடெக்டர்' வைத்து, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, மாநகர போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகுன் கூறுகையில், ''சேலம் மாநகர் முழுதும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த, கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி மசூதி, மக்கள் கூடும் பகுதிகளில், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பணியில், 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறுஉத்தரவு வரும் வரை, இந்த பாதுகாப்பு தொடரும்,'' என்றார்.
சுற்றுலா தலம்
மேட்டூர் அணை, பூங்காவில், முன்னாள் ராணுவத்தினர், 34 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். எனினும் நேற்று முன்தினம் இரவு முதல், துப்பாக்கியுடன் கூடிய எஸ்.ஐ., - ஏட்டு என, இரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணை, கதவணை மின் நிலையங்கள், செக்கானுார் கதவணை, மேட்டூர் மசூதி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

