/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு அலுவலகங்களில் பொங்கல் கொண்டாட்டம்
/
அரசு அலுவலகங்களில் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2024 03:39 AM
சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் அறை முன், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் மங்கை வள்ளி கும்மி கலை குழு சார்பில் வள்ளி கும்மி ஆட்டம், சிலம்பொலி சிலம்பம் பயிற்சியகம் சார்பில் சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம், காவடி, கோல்கால் ஆட்டங்கள், ஜெயம் கலைக்கோட்டம் சார்பில் தப்பாட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன், செயலர் நரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர். தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள, அரசு உதவி பெறும், புனித நிக்கோலஸ் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோபால் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. அதில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி, மாணவ, மாணவியருக்கு பரிசுகளை, தாளாளர் ஜோசப்பவுல்ராஜ் வழங்கினார். தாரமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவி சுமதி உள்ளிட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், ஒரே நிறத்தில் உடை அணிந்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.ஏற்காடு ஒண்டிக்கடை துணை அஞ்சலகத்தில் அதன் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில், சேலம் கிழக்கு கோட்ட துணை அஞ்சல் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் முன்னிலையில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. அதேபோல் ஆத்துார் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம், ஆத்துார் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.