/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூத்துக்குலுங்கும் டேலியா, மேரிகோல்டு: விரைவில் மலர் கண்காட்சி அறிவிப்பு
/
பூத்துக்குலுங்கும் டேலியா, மேரிகோல்டு: விரைவில் மலர் கண்காட்சி அறிவிப்பு
பூத்துக்குலுங்கும் டேலியா, மேரிகோல்டு: விரைவில் மலர் கண்காட்சி அறிவிப்பு
பூத்துக்குலுங்கும் டேலியா, மேரிகோல்டு: விரைவில் மலர் கண்காட்சி அறிவிப்பு
ADDED : மே 06, 2024 01:57 AM
ஏற்காடு: ஏற்காட்டில் டேலியா, மேரிகோல்டு மலர்கள் பூத்துக்குலுங்குவதால் விரைவில் மலர் கண்காட்சி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏற்காட்டில் கோடை விழா, மலர்கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு நடத்த, தோட்டக்கலை துறையினர், முதற்கட்ட பணியாக, கடந்த ஜனவரியில் அண்ணா, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் பால்சம், சால்வியா, கிரைசாந்தியம், ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரிகோல்ட், ஆஸ்டர், கைலார்டியா உள்பட, 40 வகை மலர்களின் விதைகள் நடும் பணியை தொடங்கினர். குறிப்பாக, 'ஏற்காடு ரோஜா' என அழைக்கப்படும் டேலியா செடிகள், 10,000 தொட்டிகளில் நடவு செய்திருந்தனர்.
இந்நிலையில் சில நாட்களாக பெய்த மழையால் அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிக்கு தயார் செய்து வைத்திருந்த செடிகளில், தற்போது பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மலர் கண்காட்சி நாள் அறிவிக்கும் முன்பே பூத்துக்குலுங்குகின்றன.
இதுகுறித்து ஏற்காடு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆப்ரிக்கன், பிரெஞ்சு மேரி கோல்டு, 'டேலியா' செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. இந்த பூக்கள், இந்த மாதம் முழுதும் பூத்திருக்கும். மற்ற செடிகளிலும் பூக்கள் மலர தயாராக உள்ளன. அதனால் மலர் கண்காட்சியின்போது அனைத்து செடிகளிலும் பூக்கள் பூத்திருக்கும். மேலும் மே, 3ம் வாரம் மலர் கண்காட்சிக்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து, அரசு சார்பில் விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஏற்காட்டில் சில நாட்களாக வெயில் தாக்கம் இருந்தது. சமீபத்தில் மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து பருவநிலை மாறியுள்ளது. இதனால் நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணியர் வந்தபடியே இருந்தனர். அவர்கள் அண்ணா பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன், பிரெஞ்சு மேரிகோல்டு மலர்கள், டேலியா மலர்களை பார்த்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம் ஆகிய பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். படகு இல்லத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பலர், படகு இல்ல சாலையில் ஒட்டகம், குதிரை மீது ஏறி சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.