/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோதண்ட ராமர் கோவிலில் மின் இணைப்பு துண்டிப்பு
/
கோதண்ட ராமர் கோவிலில் மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : ஜன 23, 2024 09:58 AM
அ.பட்டணம்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையடுத்து, சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோதண்ட ராமசுவாமி கோவில் வளாகத்தில், நேற்று 'டிவி' மூலம் கும்பாபிஷேக விழாவை நேரலையில் பக்தர்கள், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உத்தரபிரதேச மாநில எம்.பி., ஹர்நாத் சிங் யாதவ், சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் பார்த்து கொண்டிருந்தனர். மதியம், 1:00 மணியளவில் கோவில் செயல் அலுவலர் சங்கர், 'டிவி' மூலம் கும்பாபிஷேக விழாவை பார்ப்பதால், பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து வெளியில் சென்று பார்க்குமாறு கூறினார். இந்நிலையில் ஒரு சில வினாடியில் மின்தடை ஏற்பட்டது.
வேண்டுமென்றே செயல் அலுவலர் மின்தடை செய்துள்ளதாக தெரிவித்து, பா.ஜ., நிர்வாகிகள், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அவரை முற்றுகையிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் பின், 15 நிமிடத்திற்கு பிறகு மின் சப்ளை வழங்கப்பட்டு, மீண்டும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலை ஒளிபரப்பப்பட்டது.
இதுகுறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: கும்பாபிஷேக விழாவை, நேரலையில் ஒளிபரப்புவதற்கு செயல் அலுவலர் சங்கரிடம் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி கேட்கப்பட்டது. அவர் அனுமதி தரவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, சிறிய '14 இன்ச்' லேப்டாப் மூலம் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு, நேரலை ஒளிபரப்பப்பட்டது. இங்கு பார்க்கக் கூடாது வெளியில் செல்லுங்கள் என செயல் அலுவலர் தெரிவித்தார். இதன்பின் மின்சாரத்தை துண்டித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டது.
இவ்வாறு கூறினர்.

