/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரதமரின் பினாமி கட்சி அ.தி.மு.க., சேலம் தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
/
பிரதமரின் பினாமி கட்சி அ.தி.மு.க., சேலம் தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
பிரதமரின் பினாமி கட்சி அ.தி.மு.க., சேலம் தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
பிரதமரின் பினாமி கட்சி அ.தி.மு.க., சேலம் தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 13, 2024 11:02 AM
சேலம்: 'இண்டியா' கூட்டணி சார்பில், சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி போட்டியிடுகிறார்.
அவர், தாரமங்கலம் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அழகுசமுத்திரம், கோட்டமேடு, கே.ஆர்.தோப்பூர், கருக்கல்வாடி, ஓமலுார் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மல்லக்கவுண்டனுார், செல்லப்பிள்ளைகுட்டை, கோட்டகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, ஆணைகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில், திறந்தவேனில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தி.மு.க., அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகித்து ஓட்டு சேகரித்தார்.
மேலும் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: நடக்க உள்ள லோக்சபா தேர்தல், இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கும் முக்கியமான தேர்தல். 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர், நமக்கு நிதியும் தரவில்லை; நிவாரணமும் தரவில்லை. அவருக்கு தமிழகத்தை பிடிப்பதில்லை.
பா.ஜ.,வுடன் கள்ளக்கூட்டணி அமைத்துள்ள, அ.தி.மு.க., பிரதமரின் பினாமி கட்சியாக உள்ளது. இதுவரை, பிரதமர் குறித்து ஒரு வார்த்தை கூட, இ.பி.எஸ்., பேசவில்லை. நம் மக்களுக்கு வெள்ள நிவாரணம் கேட்கவில்லை. நீட் தேர்வை எதிர்க்கவில்லை. நிதி கொடுக்காதது பற்றி வாய் திறக்கவில்லை. இதுதான் கள்ளக்கூட்டணியின் அர்த்தம்.
அதேபோல் தேர்தலுக்கு, அடிக்கடி தமிழகம் வந்து செல்லும் பிரதமரும், இ.பி.எஸ்., பற்றி எதுவும் பேசுவதில்லை. அதனால், அ.தி.மு.க.,வுக்கு நீங்கள் போடும் ஓட்டு, மோடிக்கு போடும் ஓட்டு. இதை புரிந்து மக்கள் ஓட்டுப்போட வேண்டும். அதே நேரம், 3 ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் பல சாதனைகளை முதல்வர் செய்துள்ளார்.
குறிப்பாக மகளிருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கி வருகிறார். இதுவரை பெறாதவர்களுக்கும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ள முதல்வர், 2,000 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என அறிவித்துள்ளார். மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் தந்துள்ளார். பெண் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க மாதம், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாதபடி பள்ளிகளில், 13.50 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதை செய்து தந்துள்ள முதல்வரின் கரத்துக்கு வலு சேர்க்கும்படி, உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப்போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நங்கவள்ளி ஒன்றியம், கொங்கணாபுரம் ஒன்றியம், பேரூர் பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் சேலம் மேற்கு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலர் ராஜா ஐயப்பன், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், தி.மு.க., நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.

