ADDED : பிப் 05, 2025 07:22 AM
சேலம்: தை அமாவாசைக்கு பின் வரும், 7ம் நாளில், சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம், பட்டைக்கோவில் அருகே வெங்கடராமன் தெருவில் உள்ள சவுராஷ்டிரா வித்யா சபை மற்றும் கல்யாண மஹாலில் ரதசப்தமி உற்சவம் நேற்று நடந்தது.
அதில் அம்மாபேட்டை பகுதியில் சுற்றியுள்ள கோவில்களான கிருஷ்ண சுவாமி, ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள், பெருமாள், சவுந்தரவல்லி சமேத சவுந்தரராஜர், சீதா ராமச்சந்திர மூர்த்தி, லஷ்மி வெங்கடேசர் ஆகிய கோவில்களில் இருந்து, 7 பெருமாள் சுவாமிகள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக சுவாமிகளுக்கு அதிகாலையில் அபிேஷகம் செய்து பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சூரிய பிரபை வாகனத்தில் புறப்பட்டு, மண்டபத்துக்கு கொண்டுவந்தனர். அங்கு, ஒரே இடத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அதேபோல் சங்ககிரி அருகே பூத்தாலக்குட்டை, பூத்தாழீஸ்வரர் கோவிலில் உள்ள சூரியபகவானுக்கு பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்து, அலங்காரத்துக்கு பின், சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சூரிய பகவானை வணங்கினர்.