/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்ய தயக்கம்
/
மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்ய தயக்கம்
மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்ய தயக்கம்
மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்ய தயக்கம்
ADDED : மே 07, 2024 07:11 AM
மேட்டூர் : மேட்டூர் அணையின் வறண்ட நீர்பரப்பு பகுதியில், பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., அணை நிரம்பும் போது, 152 சதுர கி.மீ., பரப்பளவில் தண்ணீர் தேங்கி நிற்கும். தற்போது நீடிக்கும் வறட்சியால் நேற்று அணை நீர்மட்டம், 52.30 அடியாக சரிந்தது. இதனால், அணையில், 100 சதுர கி.மீ., பரப்பளவு பகுதி வறண்டு காணப்படுகிறது.
அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில் உள்ள, கரையோர பகுதியை சேர்ந்த மாசிலாபாளையம், பண்ணவாடி, மூலக்காடு, சின்னமேட்டூர், சேத்துக்குழி, கோட்டையூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எள், உளுந்து, சோளம், பருத்தி. வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை, அணை நீர்மட்டம் குறையும் போது பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில் ஆண்டுதோறும் அணை நீர்பரப்பு பகுதியில், பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது, பயிர் சாகுபடி செய்யாமல் பெரும்பாலான இடங்கள் வறண்டு காணப்படுகிறது.
இதுகுறித்து, அணை கரையோர கிராம மக்கள் சிலர் கூறியதாவது: அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில், பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பலர் தங்கள் மகன், மகள்களை கல்லுாரி வரை படிக்க வைத்து விட்டனர். அவ்வாறு படித்த மாணவ, மாணவிகள் பலர் வேலை காரணமாக வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இதனால், வயதான விவசாயிகள் மட்டுமே நீர்பரப்பு பகுதியில் பயிர் சாகுபடி செய்கின்றனர். இதே நிலை நீடித்தால், அடுத்த தலைமுறையில் மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.