/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெளி மாநில பஸ்களுக்கு நுழைவு வரி ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
/
வெளி மாநில பஸ்களுக்கு நுழைவு வரி ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
வெளி மாநில பஸ்களுக்கு நுழைவு வரி ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
வெளி மாநில பஸ்களுக்கு நுழைவு வரி ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
ADDED : நவ 13, 2025 01:45 AM
சேலம், ''தமிழக அரசு, வெளி மாநில பஸ்களுக்கு நுழைவு வரி பெறுவதை ரத்து செய்ய வேண்டும்,'' என, ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க, சேலம் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:
ஆம்னி பஸ்கள் படுக்கை வசதியுடன் இயக்கப்படுவதால், ஒரு பஸ்சுக்கு அதிகபட்சம், 36 இருக்கைக்கு தான் அனுமதி. இதற்கு, 90 நாட்களுக்கு, ஒரு இருக்கைக்கு, 4,000 வீதம், பஸ்சுக்கு, 1.44 லட்சம் ரூபாய் வரியை, தமிழக அரசுக்கு செலுத்துகிறோம். அதேபோல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரள மாநில அரசுகள், வெளி மாநில பஸ்களுக்கு, 1.50 லட்சம் முதல், 1.75 லட்சம் ரூபாய் வரை நுழைவு வரி வசூலிக்கின்றன. 2021ல் மத்திய அரசு, நாடு முழுதும் அனைத்து மாநிலங்களுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்க, 90 நாட்களுக்கு, 'ஆல் இந்தியா பர்மிட்' வரி, ஒரு பஸ்சுக்கு, 90,000 ரூபாய் கட்டினால் போதும் என உத்தரவிட்டது.
அதன்படி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் செலுத்தி பஸ்களை இயக்கி வருகிறோம். ஆனால் தமிழக அரசு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆம்னி பஸ்களுக்கு பழைய முறையில், கடந்த இரு ஆண்டாக நுழைவு வரி வசூலிக்கிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு, அந்த மாநில அரசுகளும் தனியே நுழைவு வரி செலுத்த கட்டாயப்படுத்துகின்றன. 'ஆல் இந்தியா பர்மிட்' பெற்றும் தனித்தனியே ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நுழைவு வரி செலுத்தி பஸ்களை இயக்க முடியாது. அப்படி செய்தால் பயணியர் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும்.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தினமும், 700 ஆம்னி பஸ்கள், சேலத்தில் இருந்து, 40 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநிலங்கள் இடையே நுழைவு வரியால், 4 நாட்களாக சேலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தினமும் ஒரு பஸ்சுக்கு, 20,000 வீதம், 40 பஸ்களுக்கு, 8 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கி கடன் வாங்கி, இத்தொழில் நடத்தும் உரிமையாளர்கள், டிரைவர், கண்டக்டர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தமிழக அரசு, வெளி மாநில பஸ்களுக்கு நுழைவு வரி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் அண்டை மாநிலங்களும், தமிழக பஸ்களுக்கு நுழைவு வரி விதிக்க மட்டோம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக போக்குவரத்து அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம் அவர் முதல்வரிடம் பேசி, முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

