/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., நிர்வாகி சுட்டுக்கொலை தம்பதி உள்பட 4 பேருக்கு 'காப்பு'
/
தி.மு.க., நிர்வாகி சுட்டுக்கொலை தம்பதி உள்பட 4 பேருக்கு 'காப்பு'
தி.மு.க., நிர்வாகி சுட்டுக்கொலை தம்பதி உள்பட 4 பேருக்கு 'காப்பு'
தி.மு.க., நிர்வாகி சுட்டுக்கொலை தம்பதி உள்பட 4 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 28, 2025 01:02 AM
பெ.நா.பாளையம், தி.மு.க., கிளை செயலரை சுட்டுக்கொன்ற வழக்கில், தம்பதி உள்பட, 4 பேரை, போலீசார் கைது செய்தனர். நிலப்பிரச்னையில் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி கிராங்காட்டை சேர்ந்தவர், ராஜேந்திரன், 45. தி.மு.க., கிளை செயலரான இவரை, கடந்த, 21 இரவு, மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். கரியகோவில் போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரித்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையில் இரு தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.
அதில் அதே பகுதியை சேர்ந்த, பங்காளி உறவு முறையான ராஜமாணிக்கத்துடன் நிலப்பிரச்னை இருந்ததால், ராஜமாணிக்கம், அவரது குடும்பத்தினர் சேர்ந்து, ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரிந்தது.இதையடுத்து ராஜமாணிக்கம், 40, அவரது அண்ணன் பழனிசாமி, 43, இவரது மருமகன் குழந்தைவேலு, 27, ராஜமாணிக்கத்தின் மனைவி ஜெயக்கொடி, 30, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நாட்டு துப்பாக்கி, தோட்டாவை பறிமுதல் செய்தனர். இவர்களை, ஆத்துார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:
ராஜேந்திரன், ராஜமாணிக்கம் இடையே நிலப்பிரச்னை தொடர்பாக, 2016 முதல், ஆத்துார் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. அதில் ராஜேந்திரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், ராஜமாணிக்கம் குடும்பத்தினர், இனியும் பணம், நிலம் இழப்பை ஏற்க முடியாது என, ராஜேந்திரனை கொல்ல திட்டமிட்டனர்.
ராஜமாணிக்கத்தின் மனைவி, அவரது அண்ணன், மருமகன் ஆகியோர், ராஜேந்திரன் வரும் பாதையை கண்காணித்து, ராஜமாணிக்கத்துக்கு தகவல் அளித்தனர். அப்போது பைக்கில் வந்து கொண்டிருந்த ராஜேந்திரனை, ராஜமாணிக்கம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மற்றவர்கள் உடந்தையாக இருந்ததால், 4 பேரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

