/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சடலத்தை புதைக்க எதிர்ப்பு பெண்கள் சாலை மறியல்
/
சடலத்தை புதைக்க எதிர்ப்பு பெண்கள் சாலை மறியல்
ADDED : ஜன 11, 2024 12:37 AM
மேட்டூர்:உடல் நலக்குறைவால் இறந்த, 101 வயது முதியவரின் சடலத்தை அடக்கம் செய்ய, ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் மற்றொரு பிரிவை சேர்ந்த பெண்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி கோட்டையூரில், ஒரு பிரிவை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அங்கு வசிப்போரில் யாரேனும் இறந்தால், கிழக்கு காவேரிபுரத்தில் அரசு புறம்போக்கில் உள்ள மயானத்தில் உடல்களை அடக்கம் செய்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் இறந்த ஒருவரை, அவர்கள் வேறு இடத்தில் அடக்கம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கோட்டையூரை சேர்ந்த பாவாஜி, 101, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை, அந்த மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
அதற்கு அதன் அருகே வசிக்கும், மற்றொரு பிரிவினர், எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்கள், நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, மேட்டூர் - மைசூரு நெடுஞ்சாலையில் காவேரிபுரம் பஸ் ஸ்டாப்பில் மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, தாசில்தார் விஜி, இரு பிரிவினரிடமும் பேச்சு நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்பட்டதால் மயானம் அருகே ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு முதியவர் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.