/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண்ணெண்ணெய் வாங்க திண்டாட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டு விழுந்த மூதாட்டிகள்
/
மண்ணெண்ணெய் வாங்க திண்டாட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டு விழுந்த மூதாட்டிகள்
மண்ணெண்ணெய் வாங்க திண்டாட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டு விழுந்த மூதாட்டிகள்
மண்ணெண்ணெய் வாங்க திண்டாட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டு விழுந்த மூதாட்டிகள்
ADDED : மே 30, 2024 07:20 AM
சேலம் : மண்ணெண்ணெய் வாங்க முண்டியடித்து சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு மூதாட்டிகள் தடுமாறி விழுந்தனர். இதற்கு பலருக்கும் மாதந்தோறும் மண்ணெண்ணெய் கிடைக்காததே காரணம் என, நுகர்வோர் குற்றம்சாட்டினர்.
அரசு ரேஷன் கடைகளில் மட்டுமின்றி அரசின் சார்பில் நியமிக்கப்படும் மண்ணெண்ணெய் பங்கு ஏஜன்ட் வழியாகவும், மண்ணெண்ணெய் வினியோகிக்கப்படுகிறது. அதன்படி சேலம் தாலுகா பொன்னம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறையில், அம்மாபேட்டை நகர கூட்டுறவு கடன் சங்கத்தின், வடக்கு அம்மாபேட்டை மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் உள்ளது. அங்கு மாதம் முழுதும் வழங்க அனுமதி இருந்தபோதும், மாதத்தில் ஒருநாள் மட்டும், மிக குறைந்த அளவில் மண்ணெண்ணெய் வழங்குவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மண்ணெண்ணெய் கிடைக்காதவர்கள், அடிக்கடி போராட்டம், சாலை மறியல் நடத்துகின்றனர். குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பல்வேறு குடும்பத்தினர், இந்த மண்ணெண்ணெயை நம்பியே உள்ளனர்.
நேற்று அதன் வினியோகத்தின்போது ஏராளமானோர் வந்ததால், 'டோக்கன்' பெறவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முண்டியடித்துச்சென்ற மூதாட்டிகள், ஒருவர் மீது ஒருவராக தடுமாறி விழுந்தனர். மேலும் நிலைய பணியாளர்கள், மக்களை அநாகரீகமாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சத்யா நகர் பெண்கள் கூறியதாவது:மாதத்தில் ஒரு நாள் மண்ணெண்ணெய் வினியோகத்தின்போது, காலை, 6:00 மணிக்கே மக்கள் வந்துவிடுகின்றனர். ரேஷன் பணியாளர்கள், காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை மட்டும் மண்ணெண்ணெய் வழங்குகின்றனர். இதனால் பாதி பேருக்கு கிடைப்பதில்லை.'ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்த பின், ரேகை வைக்க சொல்வதால் கூடுதல் நேரமாகிறது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதில், 700 மி.லி., அளவில் தான் உள்ளது. 200 முதல், 300 மி.லி., குறைவது குறித்து கேட்டால் ரேஷன் பணியாளர்கள் ஒருமையில் திட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் காயத்ரி கூறுகையில், ''தாலுகாவில் மண்ணெண்ணெய் போதிய அளவில் வருவதில்லை. வடக்கு அம்மாபேட்டை மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தில் மக்கள் தெரிவித்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்படும். அளவு குறைவு, தள்ளுமுள்ளு குறித்து ரேஷன் விற்பனையாளரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.