/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுனர் உரிமத்துக்கான கல்வித் தகுதி ரத்து
/
ஓட்டுனர் உரிமத்துக்கான கல்வித் தகுதி ரத்து
ADDED : செப் 13, 2011 02:06 AM
சேலம் : 'ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு, எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற கல்வித் தகுதி நிர்ணயத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்' என, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின், 63வது மகாசபை கூட்டம், சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டி பிசிசி திருமண மண்டபத்தில் நடந்தது.
சங்க தலைவர் சென்னகேசவன் தலைமை வகித்தார். செயலாளர் தனராஜ், உதவி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் செந்தில்செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார்.சேலம் மாவட்டத்தில், 17 ஆயிரத்து, 500 லாரிகள் ஓடுகின்றன. டேங்கர் லாரிகள், எல்.பி.ஜி.டேங்கர் லாரிகள் என, 750 லாரிகளும், வெளிமாவட்டங்களில் இருந்து, 500 லாரிகளும், சேலம் மாநகருக்கு சரக்குகளை எடுத்து வருகின்றன. இந்த லாரிகள் அனைத்தும், மாநகராட்சிக்கு சொந்தமான செவ்வாய்பேட்டை குண்டுசெட்டி ஏரி, லாரி ஸ்டாண்ட்டில் நிறுத்தப்படுகிறது.அதனால், கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. லாரி ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, பலமுறை கோரிக்கை விடுத்த போதும் நடவடிக்கை இல்லை. மழைகாலங்களில், அப்பகுதி சேறும், சகதியுமாக ஆகிறது. லாரி ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கவரி மையங்களில், தனியார் நிறுவனங்கள் உரிமம் பெற்று, அதிக தொகையை வசூலிக்கின்றனர். இது லாரி உரிமையாளர்களை பெருதும் பாதிக்கிறது. நாடு முழுவதும் ஒரே சீரான சுங்க வரியை வசூல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என, அரசு கூறியுள்ளது. இந்த உத்தரவால், லாரி தொழிலில் டிரைவர்கள் பற்றாக்குறை அதிகரிக்கிறது. லாரிகள் இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற எட்டாவது படித்திருக்க வேண்டும் என்ற உத்தரவை, மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.